இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும்,
பிரதி தினமும் வெவ்விய பசியினால் தொடப்பட்டு வாடி நித்திரை செய்யா நிற்கும் எனது வாளுக்கும்
வேலுக்கும் அம்புக்கும் ஆவியும் தசையுமென்று சொல்லுகின்ற அருமையான அமுதத்தை யுண்பித்துப் பட்சிகள்
நீட்சியைக் கொண்ட ஆகாயத்தின் கண் கீதங்களைப் பாடவும், பைசாசங்கள் இவ்வுலகத்தின் கண்
நடனத்தைச் செய்யவும், நரிகளோடு நாய்கள் சேர்ந்து விருந்தருந்தவுஞ் செய்கின்றேன்.
4372.
ஈங்கிவை யுரைத்த பண்பி னியற்றிலே னென்னில் வண்மை
தாங்கிய வீர மென்கொ லாண்மையின் றகைமை யென்கொல்
வீங்கிய சீற்ற மென்கொல் விரித்தவஞ் சினந்தா னென்கொ
லோங்கிய புவியி னென்னைப் பேடியென் றுரைக்க லாமால்.
17
(இ-ள்) அன்றியும்,
இங்கே யான் சொல்லிய இந்தப் பிரகாரஞ் செய்திலேனாயின் வளமையைக் கொண்ட எனது வீரியந்தா
னென்னை? ஆண்மையினது தன்மைதானென்னை? அதிகரித்த கோபந்தா னென்னை? விரித்துச் சொல்லிய
சபதந் தானென்னை? ஒன்றுமில்லை. பெருமையிற்று இப்பூமியின் கண் என்னை ஆணும் பெண்ணு மில்லாத
அலியென்று சொல்லலாம்.
4373.
வீரர்முன் னினைய மாற்றம் விளம்பிவிண் ணுருமிற் சீறி
மூரியங் கரம்பி சைந்து முனையெயி றிதழி னூன்றிப்
பாரவெஞ் சிலைக்கை பற்றிப் படையொடுங் கலன்க டாங்கிப்
போருடைத் தலைவர் சூழ வெழுந்தன னியங்கள் பொங்க.
18
(இ-ள்) வீரர்களான
அந்தக் காபிர்களது முன்னர் அந்தக் குயையென்பவன் இத்தன்மையான வார்த்தைகளைச் சொல்லி ஆகாயத்தினிடத்துண்டாகா
நிற்கும் இடியைப் போலுங் கர்ச்சித்துப் பெருமை பொருந்திய அழகிய கைகளை ஒன்றோடென்று சேர்த்துப்
பிசைந்து பல்லின் நுனியை அதரங்களிற் பதித்துப் பாரத்தைக் கொண்ட வெவ்விய கோதண்டத்தைக்
கையிற் பிடித்து மற்ற ஆயுதங்களோடு ஆபரணங்களையுந் தரித்து யுத்தத் தொழிலையுடைய தலைவர்கள்
தன்னை வளையவும், வாச்சியங்கள் முழங்கவு மவ்விடத்தை விட்டு மெழும்பினான்.
4374.
தழல்சொரி தருகட் பாந்த ணெடுநிலம் பனிப்பத் தாங்கா
தொழுகுநெய் செறிந்த வெள்வே லுழவர்மு னடப்பச் சீறி
யெழுமதி வேகப் பாய்மா வேறிமன் குயையென் றோது
மழகளி றனையான் கஃபா மக்கமா நகரிற் புக்கான்.
19
|