இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வா றெழும்பிய
அரசனான குயையென்று சொல்லும் இளம் பருவத்தைப் பொருந்திய யானையை நிகர்த்த அவன் கோபித்து
எழா நிற்கும் அதிக வேகத்தைக் கொண்ட குதிரையின் மீதேறி அக்கினியைச் சிந்துகின்ற கண்களை
யுடைய ஆதிசேடனால் தாங்கப்பட்ட நீட்சி பொருந்திய இந்தப் பூமியானது குளிரும் வண்ணம் தாங்காது
சொரிகின்ற இரத்தமானது செறியப் பெற்ற வெள்ளிய வேலாயுதத்தைத் தாங்கிய வீரர்கள் முன்னால்
நடக்கும் வண்ணம் கஃபத்துல்லாவை யுடைய திருமக்கமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்தான்.
4375.
வந்தொரு பாலிற் றானை யாவையு மிருத்தி வாய்ந்த
வந்தரத் துருமே றன்ன அபாசுபி யானை யெய்திச்
சிந்தையி னுவகை கூரச் செழுங்கையாற் றழுவி வாசக்
கொந்தெறி யலங்கற் றிண்டோள் குயையவ ணிருந்தான் மன்னோ.
20
(இ-ள்) வாசனை
வீசுகின்ற பூங்கொத்துக்களினாலான மாலையைத் தரித்த திண்ணிய தோள்களை யுடையவனான அந்தக் குயையென்பவன்
அவ்வாறு வந்து சைனியங்க ளனைத்தையும் ஒரு பக்கத்திலிருக்கச் செய்து சிறப்புப் பொருந்திய ஆகாயத்தின்
கண் ணுண்டாகா நிற்கும் இடியை யொத்த அபாசுபியா னென்பவ னிடத்திற் சென்று மனதின்கண் மகிழ்ச்சியானது
அதிகரிக்கும் வண்ணம் அவனைச் செழுமை தங்கிய இருகைகளினாலுங் கட்டியணைத்து அவ்விடத்தில் தங்கினான்.
4376.
தீயவன் கொலைசேர் வஞ்சச் சிந்தையன் சிதையு மாற்ற
வாயினன் பவத்திற் றோன்று மபூசகல் மகிழ்வி னீன்ற
சேயனிக் கிரிமா வென்னுந் தோன்றலுந் துணைவர் சேர்ந்த
நேயமன் னவர்க டாமு மீண்டவ ணிறைந்தார் மன்னோ.
21
(இ-ள்) அவன் அவ்வாறு
தங்க, மூடனும் கொலைத் தொழில் பொருந்திய கபடத்தைக் கொண்ட இதயத்தை யுடையவனும், நிலைநில்லாமலழிந்த
வார்த்தைகளைக் கொண்ட வாயையுடையவனுமான பாவத்தினா லவதரிக்கப்பட்ட அபூஜகிலென்பவன் மகிழ்ச்சியோடும்
பெற்ற புத்திரனாகிய இக்கிரிமாவென்று சொல்லும் மன்னவனும் அவனது தோழர்களும் பொருந்திய சினேகத்தையுடைய
அரசர்களும் ஒன்றாகக் கூடி அங்கு வந்து நிறைந்தார்கள்.
4377.
குறைசியங் காபிர் வாய்ந்த குணனுடை மாந்தர் மிக்க
அறபிக ளுலக நீதி யாவையு மறிந்த மேலோர்
மறையினைத் தெருண்டு நின்றோ ரியாவரு மருங்கு சூழக்
கறைகெழு மனத்தன் கேண்மி னீதெனக் கழற லுற்றான்.
22
|