பக்கம் எண் :

சீறாப்புராணம்

1703


இரண்டாம் பாகம்
 

ஸெயினபுநாச்சியார் கலியாணப் படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

 

4687. அரிதுணர் லுமாமின் செய்கை யவ்வண்ண மாக நீதி

     தெரிதரு மிறசூ லுல்லா சிறந்தினி திருக்கு நாளிற்

     பரிவுட னைந்தா மாண்டிற் பண்புறுஞ் சகுசென் றோது

     முரியவன் மகளை வேட்டற் குற்றதோர் தூது விட்டார்.

1

     (இ-ள்) அருமையான விஷயங்களைத் தெரிந்த அந்த லுமாம் றலியல்லாகு அன்கு அவர்களது செய்கையானது அத்தன்மையாக, நியாயத்தை யுணர்ந்த அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலாகிய நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சிறப்பாய் இன்பத்தோடு மிருக்கின்ற காலத்தில், ஐந்தாவது வருடத்தில் தகுதி பொருந்திய சகுசென்று சொல்லுகின்ற தக்கோனது புதல்வியாகிய செயினபு றலியல்லாகு அன்ஹா அவர்களை அன்புடன் விவாகஞ் செய்வதற்குப் பொருந்திய ஒப்பற்ற ஒரு தூதுவரை யனுப்பினார்கள்.

 

4688. தூயவர் விடுத்த தூது சொலுமுறை தவறி டாம

     லேயெனும் பொழுதி னீதி யிலகிய சகுசு மாட

     வாயிலி னெய்தி யன்னோன் வரத்தினால் வந்து தோன்று

     நாயகி தன்னைக் கண்டு நலனுறு மொழிகள் சொல்வார்.

2

     (இ-ள்) பரிசுத்தத்தை யுடையவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு அனுப்பிய தூதுவர் ஏயென்று சொல்லுங் காலத்தில் நியாயமானது பிரகாசிக்கின்ற அந்தச் சகுசென்பவனது மாளிகையின் வாயிலிற் சென்று அவனது வரத்தினால் வந்து இப்பூலோகத்தின் கண் அவதரித்த நாயகியாரான அந்தச் செயினபு றலியல்லாகு அன்ஹா அவர்களைப் பார்த்துச் சொல்லுகின்ற ஒழுங்கிற் பிசகாமல் நன்மை பொருந்திய சில வார்த்தைகளைச் சொல்லுவார்கள்.