பக்கம் எண் :

சீறாப்புராணம்

1705


இரண்டாம் பாகம்
 

அன்பாய் விவாகஞ் செய்யும்படி இதயத்தின்கண் சந்தோஷித்து வியந்தார்களென்று சொன்னார்கள்.

 

4692. சொல்லுமம் மொழியைக் கேட்டுத் தோகையர் திலத மென்ன

     நல்லகற் பலர்ந்த செல்வ செயினபு நாச்சி யாரும்

     வல்லவர் தூதீ ரல்லா மறைமொழிப் படியே யன்றிக்

     கல்லக ஞாலந் தன்னிற் கடிமணம் விரும்பே னென்றார்.

6

     (இ-ள்) அவ்வாறு சொல்லிய அந்த வார்த்தையைப் பெண்களுக்குத் திலகத்தை யொத்த நன்மை பொருந்திய கற்பானது மலரப் பெற்ற செல்வத்தையுடைய அந்தச் செயினபு றலியல்லாகு அன்ஹாவென்னும் நாச்சியாரவர்களுங் கேள்வியுற்று வலிமையையுடைய நபிகட் பெருமான் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது தூதரே! யான் அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவினது புறுக்கானுல் அலீமென்னும் வேதவசனத்தின்படி யல்லாமல் மலைகளைப் பொருந்திய தானத்தையுடைய இப்பூமியின் கண் புதுமையைக் கொண்ட விவாகத்தை இச்சியேனென்று சொன்னார்கள்.

 

4693. அவரவை யுரைத்து நாய னருள்பெறத் தொழுது வேறு

     கவரற விருப்பத் தூதர் கபீபிற சூலைக் கண்டு

     தவறற நடந்த செய்தி சாற்றிடக் கேட்டி யாது

     முவமையில் லானை யெண்ணி யுளமகிழ்ந் திருக்கும் போதில்.

7

     (இ-ள்) அந்தச் சையினபு றலியல்லாகு அன்ஹா அவர்கள் அச்சமாச்சாரத்தைச் சொல்லி நாயகனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் காருண்ணியத்தைப் பெறும் வண்ணம் வணங்கி மற்ற பிரிவினையான கருத்துகளில்லாமலிருக்க, அந்தத் தூதுவர் ஹபீபென்னுங் காரணப் பெயரையுடைய றசூலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து அங்கு நிகழ்ந்த சமாச்சாரத்தை குற்றமறச் சொல்ல, அதை அவர்கள் கேள்வியுற்று வேறு யாது முவமான மில்லாதவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவை நினைத்து இதயமானது சந்தோஷ மடைந்திருக்கின்ற சமயத்தில்.

 

4694. திருந்திய சபுற யீலிச் செகதல மனைத்து மொன்றாய்ப்

     பொருந்திறை குறானா யத்தைப் பொற்புடன் கொண்டு பாரிற்

     பரந்திடு மிருளை யோட்டும் பானுவின் கதிர்கள் கோடி

     விரிந்தன வென்னச் சோதி விளங்கிட நபிமுன் வந்தார்.

8