பக்கம் எண் :

சீறாப்புராணம்

1706


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) திருத்த முற்ற ஜிபுரீ லலைகிஸ்ஸலாமவர்கள் இந்தப் பூமியினிடங்க ளெல்லாவற்றிலும் ஒன்றாய்ப் பொருந்திய இறைவனான அல்லா ஜல்ல ஷகுனகுவத்த ஆலாவின் புறுக்கானுல் மஜீதென்னும் வேத வசனமாகிய ஆயத்தை அழகோடுங் கொண்டு இவ்வுலகத்தினிடத்துப் பரவிய அந்தகாரத்தை யோடச் செய்யுஞ் சூரியனது கிரணங்கள் கோடி பரவினாற் போலும் பிரகாசமானது விளங்கும் வண்ணம் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது சமுகத்தில் வந்தார்கள்.

 

4695. தேறிய குறானா யத்தின் செய்தியே தென்னி லல்லா

     மீறிய அறுசி லேதான் மிகுமொலி யாக நின்று

     மாறிலா முதன்மை யான மலக்குக ணால்வர் தாமும்

     பேறுறுஞ் சாட்சி யாக வைத்தருள் பெருகிப் பின்னும்.

9

     (இ-ள்) அவ்வாறு கொண்டு வந்த தெளிந்த புறுக்கானுல் கரீமென்னும் வேதவசனத்தின் சமாச்சாரம் யாது? என்றால், ஓங்கிய அறுஷின்கண் அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவானவன் மேலான ஒலியாக நின்று விகாரமற்ற முதன்மையான மலக்குகளாகிய ஜிபுரீ லலைகிஸ்ஸலாம், மீக்காயீ லலைகிஸ்ஸலாம், இசுறாயீ லலைகிஸ்ஸலாம், இசுறாபி லலைகிஸ்ஸலாமாகிய நால்வர்களையும் வரத்தைப் பொருந்திய சாக்ஷியாக வைத்துக் கிருபையானது அதிகரித்துப் பின்னரும்.

 

4696. தருமமு மறிவு நீதித் தவமும்பெற் றுலகி லெய்தாப்

     பெருமையும் பேறும் பெற்ற மலக்குகள் பெரிதாய்க் கூடி

     யருமறைப் பொருளா மல்லா வருளிய படியே வந்து

     திருமணம் புரிதற் குள்ள சிறப்பெலா மகிழ்ந்து செய்ய.

10

     (இ-ள்) புண்ணியத்தையும், அறிவையும், நீதியைக் கொண்ட தவத்தையு மடைந்து இவ்வுலகத்தின்கண் கிடையாத பெருமையையும் பேற்றையும் பெற்ற மலாயிக்கத்துமார்களான தேவர்கள் பெரிதாக ஒன்று சேர்ந்து அருமையான வேதப் பொருளாகிய ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவானவன் உத்தரவு பண்ணிய வண்ணமே வந்து தெய்வீகந் தங்கிய விவாகஞ் செய்தற்குள்ள சிறப்புக ளனைத்தையுஞ் சந்தோஷித்துச் செய்யவும்.

 

4697. கலக்கமில் கடலைச் சீறிக் கடைதுடித் திரண்டு காது

     மிலக்கென நடந்து மீண்ட விணைவிழிப் பவளச் செவ்வாய்த்

     துலக்குவெண் டரள மூரற் றுடியிடைக் கரிய கூந்தன்

     மலக்கமில் கூறு லீன்கள் வந்துநின் றேவல் செய்ய.

11