பக்கம் எண் :

சீறாப்புராணம்

1715


இரண்டாம் பாகம்
 

ஒட்டகை பேசிய படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4716. விரைதரு மரவ மாலை வெற்பெனத் திரண்ட தோளி

     னிரைதரப் பவளக் கொத்தி னிறந்தருங் கனிவாய் வேத

     முரைதர தீனர் வாழ்க்கை யுயர்தர விளங்கு கீர்த்தித்

     தரைதர நபிநற் செல்வந் தழைதர விருக்கு நாளில்.

1

     (இ-ள்) நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம், நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மலையைப் போலுந் திரட்சியுற்ற தங்கள் புயத்தினிடத்து வாசனையைக் கொடுக்கின்ற குங்குமப் புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையானது வரிசையாய்க் கிடக்கவும், பவளக் கொத்தினது நிறத்தைத் தருகின்ற கொவ்வைக் கனியைப் போன்ற வாயானது புறுக்கானுல் அலீமென்னும் வேதவசனத்தைச் சொல்லவும், தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடையவர்களது வாழ்வானது அதிகரிக்கவும், இப்பூமியானது விளங்கிய கீர்த்தியைத் தரவும், நன்மை பொருந்திய செல்வமானது செழிக்கவு மிருக்கின்ற காலத்தில்.

 

4717. திருவளர் மதீனந் தன்னிற் றிகழ்தரும் சகுபி மாரி

     லொருவர்தம் மகத்து வாழு மொட்டக மதமுற் றென்னப்

     பெருவலிக் கயிற்றாற் காலிற் பிணித்ததை யறுத்துச் சீறி

     மருமலர் செறியுஞ் சோலை வளாகத்திற் புகுந்த தன்றே.

2

     (இ-ள்) செல்வமானது ஓங்கா நிற்கும் அந்தத் திருமதீனமா நகரத்தின்கண் விளங்கிய அசுஹாபிமார்களில் ஒரு அசுஹாபியினது வீட்டில் வாழ்ந்த ஓரொட்டகமானது பெரிய வலிமையையுடைய கயிற்றினால் காலின்கண் கட்டினதையும் அறுத்துக் கொண்டு மதமுற்றாற் போலும் கோபித்து வாசனையைக் கொண்ட புஷ்பங்கள் நெருங்கிய சோலையாகிய ஓர் வளாகத்தினிடத்துப் போய் நுழைந்தது.

 

4718. மாமர முறித்துக் காய்த்த மதுக்குலை யரம்பை தள்ளிக்

     காமர முரலத் தேறல் கமழ்மல ரசோகை முட்டிச்

     சேமர மசைத்துக் காய்த்துச் செறிந்திடுங் கமுகை யெற்றித்

     தோமறச் செறிந்த சோலை துகள்படத் திரிந்த வன்றே.

3