பக்கம் எண் :

சீறாப்புராணம்

1725


இரண்டாம் பாகம்
 

4743. மாரிநீர் வறந்து சோலை மரமிலை யுதிர்ந்து மிக்க

     பாரினி லெழுந்த பைங்கூழ் பசையறக் கருகிக் கானற்

     றேரினம் பரந்த பெற்ற சிறார்களுக் குணவு நல்கும்

     வாரிள முலைப்பால் வற்ற வருந்தினர் மடவா ரெல்லாம்.

3

     (இ-ள்) மாரிகாலத்தின் நீரானது வற்றிச் சோலைகளினிடத்துள்ள மரங்களின் இலைகளுதிர்ந்து இப்பூமியினிடத்து எழும்பிய பசிய பயிர்கள் மிகவும் பசையின்றிக் கரிந்து கானற்றேரின் கூட்டமானது எவ்விடத்தும் பரவின. பெண்க ளனைவர்களும் தாங்களீன்ற சிறுவர்களுக்கு உணவாகக் கொடுக்கும் இரவிக்கையை யணிந்த முலையினது பாலானது வற்ற, அதனால் துன்பமுற்றார்கள்.

 

4744. தருமமுந் தவமு முள்ள தயவும்போ யெவருங் கொஞ்சக்

     கருமமுங் களவும் பாவ காரிக ளுறவுங் கொண்டு

     வருவிருந் தொருவன் வந்தால் வாயிலை யடைத்துத் தூய

     வரிவையர் தமக்கு நாணி யாண்மைகெட் டலைந்தா ரன்றே.

4

     (இ-ள்) அன்றியும், அனைவரும் புண்ணியமும் தவமுங் இதயத்தினிடத்துள்ள கருணையும் போய்ச் சிறுமையான காரியங்களையும் திருட்டையும் பாவாத்துமாக்களது நேசத்தையுங் கொண்டு வராநிற்கும் ஒருவன் விருந்தாக வந்தால் தங்கள் வீட்டினது வாயிலை மூடிப் பரிசுத்தத்தையுடைய பெண்களுக்கும் வெட்கித் தங்களது ஆண்தன்மையுங் கெட்டு அலைந்தார்கள்.

 

4745. கருமைசேர் பெரிய மேதி கபிலையு நறும்பால் வற்றி

     யருமையா யீன்ற கன்றும் வானுல கதனிற் செல்ல

     வொருவழி நடப்பக் கால்க ளூதைக்கா லடிப்ப மாழ்கித்

     தெருவழி கிடக்கும் வாட்டஞ் செப்புதற் கரிய தம்மா.

5

     (இ-ள்) அன்றியும், கருநிறத்தைப் பொருந்திய பெரிய எருமைகளும், பசுக்களும் தங்களது நறிய பாலானது வற்றப் பெற்று அருமையாகப் பெற்ற கன்றுகளுந் தேவலோகம் போய்ச் சேரவும், கால்கள் ஒரு மார்க்கமாய் நடக்கவும் அங்கு குளிர் காற்றடிக்கவும், அதனால் மயங்கி வீதிகளினிடத்துக் கிடக்கின்ற மெலிவு சொல்லுவதற்கு அருமையாகும்.

 

4746. பறவைகள் பறக்கி லாது பழுவங்க ளடுக்கு மங்கு

     நிறைதளி ரிலாமை கண்டு நெட்டுயிர்ப் பெறிந்து பாரச்

     சிறகினை விரித்துத் தண்ணீர் தேடிச்சென் றோடி விண்ணி

     லுறைதுளி யின்றி நாவு முலர்ந்துமெய் புலர்ந்த மாதோ.

6