பக்கம் எண் :

சீறாப்புராணம்

1749


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) பரிசுத்தத்தைக் கொண்ட மகாமேருப் பருவதத்தைச் சுற்றி ஆகாயத்தின் கண் பொருந்தும்படி தாவாநிற்குந் தகுதியான குதிரைகளும் காற்றினது வேகமும் யாம் உன்னோடு பொருதேமென்று சொல்லி ஓய்வடையும்படி வெப்பத்தைப் பொருந்தும் வண்ணம் பாய்கின்ற வேகத்தையுடைய குதிரைகளும் பக்கத்திற் சூழவும்.

 

4809. தான மாரி தரைநிறை யத்திகழ்

     பேன மென்ன விலாழிப் பெருக்குற

     மான வீரர் சுறவின மானவச்

     சேனை யங்கடல் வீதி செறிந்தவே.

11

      (இ-ள்) யானைகளின் மதமாகிய மழையானது பூமியில் நிறையவும் பிரகாசிக்கின்ற நுரையைப்  போலுங் குதிரைகளின் வாயினிடத்திருந்துண்டாகா நிற்கும் நுரையினது பெருக்கமானது மிகுக்கவும், வலிமையை யுடைய வீரர்கள் சுறாக் கூட்டங்களை யொப்பவும், அந்தச் சேனாசமுத்திரமானது தெருவினிடத்துக் கூடிற்று.

 

4810. புடைசெ றிந்து பரந்து புகுந்துற

     மிடையுஞ் சேனையிவ் வீதி பொறாதென

     மடைதி றந்த புனலென வாழெயிற்

     கடைக டந்து நடந்து கலிக்கவே.

12

      (இ-ள்) அவ்வாறு பக்கத்தில் நெருங்கிப் பரவி வந்து சேரும் வண்ணஞ் செறிந்த சைனியமானது இந்தத் தெருக் கொள்ளாதென்று மடையைத் திறந்து விட்ட நீரைப் போலுந் செல்வத்தோடிருக்கின்ற அந்தத் திரு மதீனமா நகரத்தினது கோட்டைவாயிலைத் தாண்டி நடந்து கலிக்கும் வண்ணம்.

 

4811. வாயு வேகமும் வான்முகில் வேகமும்

     போய கன்று புறந்தரக் கால்விசை

     மேய வத்திரி மீதில் விருப்புறத்

     தூய ராமிற சூல்நபி யேறினார்.

13

      (இ-ள்) பரிசுத்தமுடையவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் காற்றினது விரையும் ஆகாயத்தினிடத்துள்ள மேகத்தினது விரையும் விலகிப் போய்ப் பின்வாங்கும்படிப் பாதங்களினது வேகத்தைப் பொருந்திய ஒட்டகத்தின் மீது ஆசையானது பொருந்தும் வண்ணம் ஏறினார்கள்.