பக்கம் எண் :

சீறாப்புராணம்

1750


இரண்டாம் பாகம்
 

4812. பேரி பம்பை பெருந்துடி திண்டிமந்

     தூரி யங்களு மொன்றித் துவைத்தலின்

     வாரி யோசையை மாற்றியவ் வானவ

     ரூரு மஞ்சுதற் கோசையுண் டானதே.

14

      (இ-ள்) அவ்வாறு ஏற, முரசங்களையும் பம்பைகளையும் பெரிய உடுக்கைகளையும் தம்பட்டங்களையும் தூரியங்களையுஞ் சேர்ந்து அடிப்பதினாற் சமுத்திரத்தினது முழக்கத்தை மாறும்படி செய்து அந்தத் தேவர்களது நகரமாகிய தேவலோகமும் பயப்படும் வண்ண முழக்கமானதுண்டாயிற்று.

 

4813. புவனந் தாங்கும் பொருப்புறழ் யானையுங்

     கவன வேகக் கலினப் புரவியு

     மவனி மீதரி யேறெனும் வீரரா

     மெவருஞ் சூழ நபிவிரைந் தேகினார்.

15

      (இ-ள்) அவ்வாறுண்டாக, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இப்பூமியால் தாங்கப்படுகின்ற மலைகளை நிகர்த்த யானைகளும் மிகவும் வேகத்தைக் கொண்ட கடிவாளத்தையுடைய குதிரைகளும் இப்பூலோகத்தின் கண் ஆண் சிங்கமென்று சொல்லும் வீரர்களாகிய யாவர்களுந் தங்களைச் சூழும் வண்ணம் வேகமாய்ப் போனார்கள்.

 

4814. அரிய பாலை வனமு மடவியும்

     விரியு நீரரு விச்செழுங் குன்றமும்

     பிரச மூறு மலர்ப்பெருஞ் சோலையுங்

     கரைகொண் மாந்தி யுங்கடந் தேகினார்.

16

      (இ-ள்) அவ்வாறு போன அவர்கள் அருமையான பாலை நிலங்களையுடைய காடுகளையும் அடவிகளையும் பரந்த செழிய நீரையுடைய அருவியினது அழகிய மலைகளையும் மதுவானது சுரக்கா நிற்கும் புஷ்பங்களையுடைய பெரிய சோலைகளையும் கரைகளைக் கொண்ட பெரிய ஆறுகளையுந் தாண்டிப் போனார்கள்.

 

4815. மக்க மாநகர் நோக்கி வழிக்கொண்டு

      புக்கு காலையிற் பொற்புறும் வான்சிறை

      தொக்க மேனி சுடர்விட வையமுந்

      திக்கும் போற்றுஞ் சிபுரியீல் வந்தனர்.

17

      (இ-ள்) அவ்வாறு திரு மக்கமா நகரத்தைப் பார்த்துப் பிரயாணப்பட்டு போகின்ற காலத்தில், அழகைப் பொருந்திய