பக்கம் எண் :

சீறாப்புராணம்

1753


இரண்டாம் பாகம்
 

4822. அம்ம லைக்கண வாய்வழி யாய்வரிற்

     செம்ம லைக்கொடு செல்கின்ற வத்திரி

     மம்ம ருற்று மனத்தொடு தாழ்ந்துதான்

     பம்மி வீழ்ந்து படுத்தது பாரினே.

24

      (இ-ள்) அந்த மலையினது கணவாய் வழியாகப் போகின்ற சமயத்தில் அரசரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் தாங்கிக் கொண்டு போகின்ற ஒட்டகமானது மயக்கமடைந்து மனத்தோடும் பாதங்கள் பணியப் பெற்றுப் பம்மிப் பூமியில் விழுந்து படுத்தது.

 

4823. அலைத்த தட்டி யெழுப்பினு மாங்கவ

     ணிலத்தில் வீழ்ந்த நிலைபெய ராமையாற்

     புலத்து வீழிறும் பூதிவை யேதென

     மலைத்து நின்று மயங்கின ரியாவரும்.

25

      (இ-ள்) அவ்வாறு படுக்க, அவ்வொட்டகத்தை அடித்து உழுக்கி யெழுப்பியும் அது அங்கே அந்த இடத்தில் விழுந்த நிலையை விட்டும் பெயராததனால் அனைவர்களும் இவ்வொட்டகமானது இந்த இடத்தில் விழுந்து படுத்த ஆச்சரியமாகிய இச்சமாச்சாரம் யாது? என்று சொல்லித் தடுமாறி நின்று மயங்கினார்கள்.

 

4824. ஆய தன்மை யறிந்தசு காபிக

     டூய நெஞ்சந் துளக்கற வேயிறை

     மேய சொற்படி வீழ்ந்த தன்றிவே

     றேய்வ தில்லை யெனநபி செப்பினார்.

26

      (இ-ள்) அவ்வாறு மயங்கின விதத்தை நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தெரிந்து அசுஹாபிமார்களது பரிசுத்தத்தைக் கொண்ட இதயங் கலக்கமறும்படி இவ்வொட்டகமானது யாவர்க்குங் கடவுளான அல்லாஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் தகுதியான ஏவலின் வண்ணம் வீழ்ந்ததேயல்லாமல் வேறு வீழவில்லையென்று சொன்னார்கள்.

 

4825. தரையில் வீழொட்ட கந்தனை நோக்கிநம்

     மறைகொ ளாமக்க மாநக ரார்களிம்

     முறைத மக்கெம் மொழிசொல வேண்டுமென்

     றறைகி னுமவர்க் கன்புறக் கூறுவேம்.

27