பக்கம் எண் :

சீறாப்புராணம்

1754


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு சொல்லிப் பூமியில் விழுந்த அந்த ஒட்டகத்தைப் பார்த்து நமது புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தை யேற்றுக் கொள்ளாத திரு மக்கமா நகரத்திலுள்ள காபிர்கள் இந்தத் தடவை தங்களுக்கு எந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டுமென்று சொன்னாலும் யாம் அவ்வார்த்தைகளை அவர்களுக்கு அன்பானது பொருந்தும் வண்ணஞ் சொல்லுவோம்.

 

4826. இறைவ னாணை யுதுதவ றேமெனக்

     குறைவி லாத புகழ்நபி கூறிய

     நறைகொள் வாய்மொழி கேட்டு நயந்துமெய்ப்

     பொறைகொ ளொட்டை பொருக்கென் றெழுந்ததே.

28

      (இ-ள்) யாவர்க்கும் இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் பேரிற் சத்தியமாக இதைப் பிசகோமென்று குறைவற்ற கீர்த்தியையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சொல்லிய வாசனையைக் கொண்ட வாயினது வார்த்தையை மெய்யின்கண் சுமையைப் பெற்ற அவ்வொட்டகமானது கேள்வியுற்று விரும்பிப் பொருக்கென்று எழும்பிற்று.

 

4827. எழுந்த பின்ன ரிறையவன் றூதர்தா

     டொழுந்த னிப்படை வீரர்கள் சூழ்வர

     வழுந்து பாவக் குபிர ரடர்ந்துறுஞ்

    செழுந்தி சையைவிட் டோர்வழி செல்குற்றார்.

29

      (இ-ள்) அவ்வாறு எழும்பிய பின்னர்க் கடவுளான அல்லா ஜல்ல ஷகுனகுவத்த ஆலாவின் றசூலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களது திருவடிகளை வணங்குகின்ற ஒப்பற்ற சேனா வீரர்கள் தங்களை வளைந்து வரும் வண்ணம் அழுந்திய பாவத்தையுடைய காபிர்கள் நெருங்கித் தங்கிய அந்தச் செழிய திசையை விடுத்து வேறோர் மார்க்கமாய்ப் போனார்கள்.

 

4828. திண்மை மீறிய தீனர்க ளியாவரு

     முண்மை சேர்பய காம்பரு மோங்கிய

     வண்மை சேர்மக்க மாநக ருக்கரு

     கண்மிச் சேர்ந்தன ராண்டு குதைபிய்யா.

30