பக்கம் எண் :

சீறாப்புராணம்

1761


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) உட்கார்ந்திருந்தவ னெழும்பிக் காபிர்களாகிய அனைவரையும் புகழ்ந்து துதித்துச் செவ்வையாக யான் சொல்லுகின்ற விண்ணப்பமானது உங்க ளிருகாதுகளுக்கு மேறாதாயினும் குழந்தையினது வருந்திய மழலைச் சொல்லைக் கேள்வியுற்று தாயானவள் சந்தோஷிப்பதைப் போல, நீங்கள் பொருந்தும் வண்ணங் கேட்பீர்களேயானால் அதை நன்மையுறும் படி சொல்லுவேனென்று சொன்னான்.

 

4848. அனைவரு மகிழ்ந்து கேட்டு னறிவினுக் கிசைந்த மாற்ற

     மெனையன வுளவோ வெல்லா மியம்புதி யென்று சொல்ல

     நனைமலர் செறியுந் தாம நறுமணங் கமழ்ந்த மார்பன்

     கனைகழ லுறுவா வென்னுங் காளைநின் றினைய சொல்வான்.

50

      (இ-ள்) அவன் அவ்வாறு சொல்ல, அந்தக் காபிர்களனைவரும் அதைக் கேள்வியுற்றுச் சந்தோஷித்து உனது புத்திக்குப் பொருந்திய எத்தன்மையான சமாச்சாரங்க ளிருக்கின்றனவோ? அவைகளியாவையுஞ் சொல்லுவாயாக வென்று சொல்ல, மதுவைக் கொண்ட புஷ்பங்கள் செறிந்த மாலையானது நறிய வாசனையை வீசிய மார்பையுடையவனான ஒலிக்கா நிற்கும் வீர்க்கழலைத் தரித்த அந்த உறுவாவென்று சொல்லப்பட்ட வாலிபன் அங்கே நின்று இத்தன்மையான சமாச்சாரத்தைச் சொல்லுவான்.

 

4849. தழைசெறி மரவ மாலை தயங்குதிண் புயத்தார் மிக்க

     மழைசெறி கவிகை வண்மை முகம்மது நபிசொல் வாய்மை

     பழமையு மறிவும் வேதப் பான்மையு நீதி சேருங்

     கிழமையும் பொருந்திற் றாமா லவ்வுரை கேட்ட னன்றாம்.

51

      (இ-ள்) தழைகள் செறிந்த குங்குமப் புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையானது பிரகாசிக்கின்ற திண்ணிய தோள்களை யுடையவராகிய மேலான மேகங்களால் நெருங்கப்பட்ட குடையையுடைய அழகிய அந்த முகம்மது நபியென்பவர் சொல்லுகின்ற வார்த்தையானது பழமையையும், அறிவையும், வேதத்தினது பான்மையையும், நியாயமானது பொருந்திய குணத்தையும் பொருந்திற்று. ஆதலால் நாம் அவ்வார்த்தையைக் கேட்குதல் நன்மையாகும்.

 

4850. யாவரு மிசைந்தென் றன்னை யவரிடத் தேவு வீரேற்

     றாவரு மொழிகள் சொல்லத் தகுவன வுரைத்து மீள்வே

     னோவலில் குணத்தீ ருங்கட் குறுதியே தென்ன வல்லை

     போவென விடைகொ டுத்தார் போயவ னபிபாற் புக்கான்.

52