பக்கம் எண் :

சீறாப்புராணம்

1765


இரண்டாம் பாகம்
 

பார்த்து நின்று கையாற் பொருந்தும்படி அவர்களது தாடியைத் தாங்கி வார்த்தைகள் சொல்லுகின்ற சமயத்தில், ஒளியானது பிரகாசியா நிற்குங் கூரிய வாளாயுதத்தைத் தாங்கிய முகைறத்து றலியல்லாகு அன்கு அவர்கள் வெற்றியை யுண்டாக்குகின்ற தங்களது வாளாயுதத்தினால் அன்று அந்த உறுவாவென்பவனது கையைத் தட்டித் தூரத்தில் நின்று பேசென்று சொன்னார்கள்.

 

4859. இலங்கிய வுறுவா வென்போ னிருந்தவர் தம்மை நோக்கிச்

     சலந்தரு மிவனா ரென்ன முகைறத்தென் றவர்கள் சாற்றப்

     புலந்தவர் தம்மை நோக்கிக் காபிராய்ப் புகழ்சேர் மக்கத்

     தலந்தனி லிருக்கு மேனாட் சிலரொடு தகமை கூர்ந்தே.

61

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்ல, விளங்கிய அந்த உறுவாவென்பவன் அங்கே யிருந்த அசுஹாபிமார்களைப் பார்த்துத் தணியாக் கோபத்தைக் கொடுக்கின்ற இவன் யாவன்? என்று கேட்க, அவர்கள் முகைறத்து றலியல்லாகு அன்கு அவர்களென்று சொல்ல, அவன் பிணங்கினவர்களான அவர்களைப் பார்த்து நீ காபிராய்க் கீர்த்தியைப் பொருந்திய திரு மக்கமா நகரத்தின் கண்ணிருந்த ஆதிகாலத்தில் சில பேர்களோடு பண்பு கூர்ந்து.

 

4860. இருக்கின்ற நாளி லன்னோ ருயிரினுக் கிறுதி செய்து

     திருக்கிளர் நிதியும் வவ்வி நீயிவண் சேர்ந்து தீனர்

     வருக்கமா யீமான் கொண்டு முகம்மது நபிக்கு மெத்த

     வுருக்கமா னவர்போ னின்றா யுன்னைப்போ லுலகி லுண்டோ.

62

      (இ-ள்) நீ இருக்கின்ற காலத்தில் அவர்களது பிராணனுக்கு முடிவைச் செய்து அழகானது ஓங்கப் பெற்ற அவர்களது திரவியங்களையும் வாரிக் கொண்டு இங்கே வந்து சேர்ந்து தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தையுடையவர்களது இனமாய் ஈமான் கொண்டு முகம்மது நபியென்பவருக்கு மிகவும் அன்பானவர்களைப் போல நின்றாய். உன்னைப் போலும் ஒருவர் இந்த உலகத்தி லிருக்கின்றாரா? இல்லை.

 

4861. உனக்குநா னுடந்தை யாக வுற்றவ ணிருந்துன் னாலே

     யெனக்குறுந் துயரு நெஞ்ச மிடைந்துநான் பட்ட பாடு

     மனக்கொளா திருப்ப துண்டோ மறந்துபோ யினையோ வென்னச்

     சினத்துட னகைத்து நிந்தாத் துதிமொழி செப்பி நின்றே.

63

      (இ-ள்) அன்றியும், உனக்கு நான் சொந்தமாக அங்கே பொருந்தியிருந்து உன்னால் எனக்கு வந்த துன்பங்களையும், அதனால் யான் மனமானது வசங்கெட்டுப் பட்டபாட்டையும் இதயத்தின் கண் கொள்ளாமலிருப்பதுண்டா? மறந்து போனாயா?