பக்கம் எண் :

சீறாப்புராணம்

1766


இரண்டாம் பாகம்
 

என்று கோபத்தோடும் நகைத்து நிந்தாஸ் துதியாகிய வார்த்தைகளைச் சொல்லி நின்று.

 

4862. அலங்கலந் தொடையல் வேய்ந்த அகுமதின் றிறனும் வீர

     மலங்கிய வடிவாட் செங்கை யார்கள்வா சகமு முள்ளங்

     கலங்கலில் லாத வெற்றி சகுபிகள் கருத்துங் கண்டு

     நலங்கிளர் நபியைப் போற்றி விடைகொடு நகரம் புக்கான்.

64

      (இ-ள்) பிரகாசிக்கின்ற அழகிய மாலையைத் தரித்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது தன்மையையும், வீரமானது விளங்கப் பெற்ற கூரிய வாளாயுதத்தைத் தாங்கிய சிவந்த கையையுடையவர்களான அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு, முகைறத்து றலியல்லாகு அன்கு ஆகிய இவர்களது வாசகங்களையும், இதயமானது அஞ்சாத விஜயத்தையுடைய அசுஹாபிமார்களது எண்ணங்களையும் பார்த்து நன்மையானது ஓங்கிய அந்நபிகட் பெருமானாரவர்களைப் புகழ்ந்து விடை வாங்கிக் கொண்டு தனது ஊராகிய திரு மக்கமா நகரத்தின் கண் வந்து சேர்ந்தான்.

 

4863. குலவரை யனைய மாட கூடமு நறைசேர் காவு

     மலர்செறி தடமும் வாய்ந்த மக்கமா நகரி னுள்ள

     கலைபயி லறிவில் லாத காபிர்பாற் சென்று சற்று

     மலைவிலா வுறுவா வென்று மதிவலோ னுரைக்க லுற்றான்.

65

      (இ-ள்) அவ்வாறு சேர்ந்து அஷ்டப் பருவதங்களைப் போன்ற மாட கூடங்களும், வாசனை பொருந்திய சோலைகளும், புஷ்பங்கள் நெருங்கிய தடாகங்களுஞ் சிறந்த அந்தத் திரு மக்கமா நகரத்திலுள்ள சாஸ்திரங்களிற் பழகிய அறிவில்லாத காபிர்களிடத்துப் போய்க் கொஞ்சமும் அச்சமில்லாத அந்த உறுவாவென்று சொல்லும் அறிவினால் வலிமையுற்றவன் சொல்ல ஆரம்பித்தான்.

 

4864. ஏற்றமா நபிபா லியான்சென் றெய்தினேன் புதையில் வந்து

     சாற்றிய மொழியி லொன்றுந் தவறிலா துரையென் றந்த

     மாற்றமே யெனக்குஞ் சொன்னா ரியானது மனங்கொண் டுற்றேன்

     றோற்றமா மவர்தம் மேன்மைத் தொழிலினம் விளம்பக் கேளீர்.

66