பக்கம் எண் :

சீறாப்புராணம்

177


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், கலக்கமுற்று அழுது பதறுவார்கள். மிகப் பதைத்து அலறி ஒலித்துக் கத்துவார்கள். அந்தோவென்று சொல்லித் துன்புறுவார்கள். தாங்கள் தரித்திருந்த ஆபரணங்க ளனைத்தும் சிந்தும்படி யோடோடியுந் திரும்பிப் பெருமூச்சு அதிகரித்து மனம் வருந்தி யுயிரானது சோரும் வண்ணம் வசக்கேடடைந்து வாட்டங் கொள்ளுவார்கள்.

 

411. மல்விதம் பயிலுந் திண்டோண் மன்னவ ரிவர்க ளியாரோ

    தொல்விதிப் பயனால் வந்து சூழ்ந்துகைக் கருவி தன்னாற்

    கொல்வதுக் கிசைந்த பேரோ குரிசிலைக் கொண்டு தம்மூர்

    செல்வதுக் கிருக்கின் றாரோ தெரிகிலோ மென்ன நைவார்.

21

     (இ-ள்) அன்றியும், மற்றொழுலிற் பழகா நிற்கும் திண்ணிய புஜங்களையுடைய அரசர்களான இவர்கள் யாவர்களோ! ஆதிகாலத்தில் அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் கற்பித்த ஊழினது விதிப்பயனால் இப்போது வந்து தங்களது கையில் இருக்கப்பட்ட ஆயுதத்தினால் நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை வதைசெய்வதற்கு உடன் பட்டவர்களோ! அல்லது அவர்களைத் தங்களது நகரத்திற்குக் கொண்டு போவதற்கு இருக்கின்றார்களோ! நாம் தெரிந்தோ மிலையேயென்று சொல்லித் தளர்ச்சியடைவார்கள்.

 

412. கடலிடைப் புவியி லெங்கண் முகம்மது பேரிற் கையாற்

    றொடநினைத் தவரு மில்லைத் தொடர்ந்துகைப் பற்றி நுங்க

    ளிடமற விருத்தல் செய்தீ ரேதுகா ரணமோ வெங்க

    ளுடனுரைத் திடுவீ ரென்ன வுரைத்துவாய் புலர்ந்து நிற்பார்.

22

     (இ-ள்) அவ்விதம், தளர்ச்சியடைந்த சிறுவர்கள் கடல் சூழ்ந்த இப்பூலோகத்தின்கண் எங்களது நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்மீது துற்சிந்தனையுடன் கையினால் தீண்டும்படி மனசின்கண் நினைத்தவர்களுமில்லை. அவ்வாறு செய்தவர்களுமில்லை. ஆனால் நீங்கள் அவர்களைப் பின்பற்றி அவர்களின் கையினைப் பிடித்து உங்களது இடத்திற் பொருந்தும்படி இருக்கச் செய்தீர்கள். அங்ஙனஞ் செய்தது யாது காரணத்தினால், அதை எங்களுடன் சொல்லுங்களென்று சொல்லி வாயானது உலரப் பெற்று நின்றார்கள்.

  

413. மறைபடாச் செவ்வி வாய்ந்த முகம்மது பேரிற் சற்றே

    குறைபட நினைக்கின் றீராற் குடிகுடி வடுவு நுங்கட்

    கிறையவன் முனிவும் பாரி லெண்ணிலாப் பழியுஞ் சூழு

    முறையல விடுமி னென்ன மொழிந்துநெஞ் சழிந்து நிற்பார்.

23