பக்கம் எண் :

சீறாப்புராணம்

178


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அச்சிறுவர்கள் எக்காலும் பிரகாசியா நிற்கும் அழகானது வாய்க்கப்பெற்ற நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்மீது யாதாயினுஞ் சற்றே குறையுண்டாகும்படி நீங்கள் கருதுவீர்களே யானால் உங்கள் குடியென்ற குடிக்கெல்லாம் வடுவும் உங்களுக்கு ஹக்குசுபுகானகுவத்த ஆலாவின் கோபமும் இவ்வுலகத்தின்கண் கணக்கில்லாத பழியும் வந்துவளையும் ஆனதால் நீங்கள் அவர்களைப் பிடித்து வைத்திருப்பது ஒழுங்கல்ல விட்டு விடுங்களென்று சொல்லித் தைரியமற்று நின்றார்கள்.

 

414. முகம்மது பேரி னும்மால் வடுவரு மாகி லிந்த

    செகமகி ழலிமா வென்னுந் திருந்திழை பழியு மீன்ற

    நகைமணி முறுவ லாமி னாவுயிர்ப் பழியு மல்லாற்

    பகைபெரி துடைய ராகிப் பழியெலாஞ் சுமப்பீ ரென்றார்.

24

     (இ-ள்) அன்றியும், நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்மீது உங்களால் யாதேனுமொரு குற்றம் வருமேயானால் இந்த வுலகமானது மகிழாநின்ற ஹலிமாவென்று சொல்லும் திருந்திய ஆபரணங்களை யுடையவர்களது பழியும், அந்நபிகணாயக மவர்களைப் பெற்ற ஒள்ளிய முத்துப் போலும் பற்களையுடைய ஆமினா அவர்களின் ஜீவப் பழியும் தாங்குவதுமன்றிப் பெரிய விரோதத்தையுடையவர்களாய் அதனால் வரும் எல்லாப் பழியையும் நீங்களே தாங்குவீர்களென்றுஞ் சொன்னார்கள்.

 

415. இத்திறஞ் சிறுவர் கூற வியலபு துல்லா வென்னுஞ்

    சித்திர வடிவன் செவ்வாய் திறந்திரு வரையு நோக்கி

    வித்தகன் முகம்ம தின்னை விடுமெனை நுங்கட் கேற்ற

    குத்திரங் கொலையா தேனுங் குறித்ததை முடித்தி ரென்றான்.

25

     (இ-ள்) இந்த வகையாக அங்கு கூடிநின்ற பாலியர்கள் சொல்ல, ஹலிமா அவர்கள் புதல்வரான தகுதி பெற்ற அப்துல்லா வென்னும் அழகிய சொரூபத்தையுடைய பிள்ளையானவர் தமது சிவந்த வாயினைத் திறந்து அவ்விருவர்களையும் பார்த்து நீங்கள் அற்புதத்தையுடையவர்களாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை விட்டுவிடுங்கள். அதற்குப்பதிலாக என்னை உங்களுக்குத் தகுதியான குத்திரம் பழி முதலிய யாதேனும் செய்து நீங்கள் எண்ணிய காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்களென்று சொன்னார்.