|
இரண்டாம்
பாகம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
4971. எறிந்தவப்
படைக ளெல்லா மிடுங்கிடு கதனால் வீழ்த்திச்
செறிந்திடும் வாட்கொண் டோங்கி வெட்டினர் பரியின்
சென்னி
தறிந்திட வீழ்ந்தெ ழுந்த பாதகன் றடக்கை வாளா
லிறந்திடப் புயத்தின் மீது தாக்கின னெருவை கால.
60
(இ-ள்) அவ்வாறு வீசிய அந்த
ஆயுதங்களெல்லாவற்றையுந் தாங்களணிந்திருக்குங்
கேடகத்தினால் விழும்படி செய்து செறியா நிற்கும்
வாளாயுதத்தினால் ஓங்கி வெட்டினார்கள். அவ்வெட்டினாற்
குதிரையின் தலையானது அறும் வண்ணம் பூமியில் விழுந்து
எழும்பிய பாவியாகிய அந்த அப்துர்றஹ்மா னென்பவன் தனது
பெரிய கையினிடத்துள்ள வாளாயுதத்தினால் இரத்தமானது
கொப்பளிக்கவும், இறக்கவும் அவர்களது தோளின்மீது
வெட்டினான்.
4972. திறலுடை
யகுச மென்னுஞ் செம்மல்வீழ்ந் திறந்த போழ்திற்
கறுள்வயப் பரியை வௌவி யேறினன் பரிக டாவி
விறலுடை யபூகு தாதா லென்னுமவ் வீரர் வந்து
மறமுடைக் கயவன் றன்னை வீழ்த்தின ரொருங்கு வாளால்.
61
(இ-ள்) அவ்வெட்டினால் வலிமையையுடைய அந்த
அகுசம் றலியல்லாகு அன்கு என்று சொல்லும் அரசரவர்கள்
பூமியின்கண் விழுந்து மரித்தசமயத்தில், அவன்
கடிவாளத்தைக் கொண்ட வலிமையை யுடைய அவர்களது
குதிரையைப் பிடித்து அதன் மீது ஏறினான். உடனே
வெற்றியையுடைய அபூகுதாதா றலியல்லாகு அன்கு என்று
சொல்லும் அந்த வீரரவர்கள் தங்களது குதிரையைச்
செலுத்தி வந்து பாவத்தையுடைய கீழ்மையனான அந்த
அப்துர்றஹ்மானென்பவனைத் தங்களது வாளாயுதத்தினால்
வெட்டி ஒருங்கே பூமியின்கண் விழும்படி செய்தார்கள்.
கலிவிருத்தம்
4973. மடமபு துற்றகு மானி
றந்திடக்
கடகரி நிகர்சல்மா வென்னுங் காவலர்
புடையினிற் செறிந்திடும் புரவி மீதினிற்
றொடைதொடுத் தார்த்தனர் தொடர்ந்து பற்றியே.
62
(இ-ள்) அறிவின்மையையுடைய அந்த
அப்துர்றஹ்மானென்பவன் அவ்வாறு விழுந்து மாள, மதத்தைக்
கொண்ட யானையை நிகர்த்த சல்மா றலியல்லாகு அன்கு என்று
சொல்லும் அரசரவர்கள் பின்பற்றிப் பிடித்து தங்களது
பக்கத்தில் நெருங்கிய குதிரைகளின் மேல் அம்புகளைத்
தொடுத்து ஆரவாரித்தார்கள்.
|