|
இரண்டாம்
பாகம்
4974. தனுவுமிழ் சரத்தினாற்
றடியுங் காலையி
னனைமல ரபூகுதா தாந யந்துபின்
மனமகிழ் தரவவை யிடத்தின் வைகினார்
கனைகழ லினர்சல்மா காலி னேகினார்.
63
(இ-ள்) அவ்வாறு கோதண்டத்தினாற்
சிந்தப்படும் அம்புகளினாற் கொல்லுகின்ற சமயத்தில்,
மதுவைக் கொண்ட புஷ்பங்களினாற் செய்யப்பட்ட
மாலையையுடைய அபூகுதாதா றலியல்லாகு அன்கு அவர்கள்
விருப்பமுற்றுப் பின்னர் இதயமானது மகிழ்ச்சியடையும்படி
அந்தக் கூட்டத்தினிடத்துத் தங்கினார்கள். ஒலிக்கா
நிற்கும் வீரக்கழலைத் தரித்தவர்களான அந்தச் சல்மா
றலியல்லாகு அன்கு அவர்கள் காலினாற் சென்றார்கள்.
4975. விரைவொடு மெழுந்துவிற்
குனித்துப் பின்றொடர்ந்
திரையுரு மெனச்சினந் தெய்யு மம்பெலாம்
பரருர மீதினிற் படிய விட்டனர்
வரியளி முரலறா மலர்ப்பு யத்தினார்.
64
(இ-ள்) இரேகைகளைக் கொண்ட வண்டுகளின்
முழக்கமானது மாறாத புஷ்பத்தினாற் செய்யப்பட்ட
மாலையைத் தரித்த தோள்களையுடைய அந்தச் சல்மா
றலியல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு வேகத்தோடு
மெழும்பிச் சென்று பின்பற்றித் தங்களது கோதண்டத்தை
வளைத்து ஒலிக்கா நிற்கும் இடியைப் போலுங் கோபித்து
எய்யா நிற்கும் அம்புக ளியாவும் சத்துராதிகளான அந்தக்
காபிர்களது மார்பின் மேற் குளிக்கும்படி விட்டார்கள்.
4976. ஆயிரஞ்
செங்கதிர்ப் பருதி யாதவன்
சாயைமேற் சாய்தரு மளவும் பின்றொடர்ந்
தோய்விலாப் பகழிதொட் டொருமித் தார்த்திடக்
காய்மனக் காபிர்கள் கலைந்து டைந்தனர்.
65
(இ-ள்) அவ்வாறு செந்நிறத்தைக் கொண்ட
ஆயிரங் கிரணங்களைப் பெற்ற வட்ட வடிவமாகிய சூரியனது
சாயையானது மேற்றிசையில் சாயும் வரையும் அவர்களைப்
பின்பற்றி மாறாத அம்புகளை ஒருமித்துத் தொட்டு ஆர்க்க,
புண்ணாகிய மனத்தையுடைய அந்தக் காபிர்கள் குலைந்து
சாய்ந்தார்கள்.
4977. வாட்டிறல் வீரரும்
வாம்ப ரித்திரட்
கூட்டமும் விரைந்துபோய்க் கோத்தி ரைக்கணின்
பாட்டுறை யிலஞ்சியுட் படிந்த வூற்றிடை
நாட்டமுற் றுறைந்தனர் நார மார்ந்திட.
66
|