பக்கம் எண் :

சீறாப்புராணம்

1809


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) வாளாயுதத்தில் வல்லமையுடைய வீரர்களும் தாவா நிற்குங் குதிரைகளின் திரளாகிய கூட்டமும் அவ்வாறு சாய்ந்து வேகமாய்ப் போய் ஒரு மலையின்கண் இனிய முழக்கமானது தங்கிய ஒரு வாவியினகத்து அமர்ந்த ஊற்றினிடத்து நீரான தருந்தும்படி விருப்பமுற்றுத் தங்கினார்கள்.

 

4978. மடுவினிற் கமலமொண் டருந்து மெல்வையிற்

     கடதடக் களிறெனுங் காளை பின்றொடர்ந்

     திடிபடு மழைபொழிந் தென்ன வெய்தன

     ரடுசரம் புயங்களி லழுந்தித் தைக்கவே.

67

      (இ-ள்) அவ்வாறு தங்கி அந்த வாவியினிடத்து நீரைக் கைகளால் மொண்டு உண்ணுகின்ற சமயத்தில், மதத்தைக் கொண்ட பெரிய யானையென்று சொல்லும் வாலிபரான அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள் பின்பற்றிப் போய் இடியைக் கொண்ட மேகமானது நீரைப் பொழிந்தாற் போலுங் கொலை செய்கின்ற அம்பானது அவர்களது தோள்களில் அழுந்தித் தைக்கும் வண்ணம் எய்தார்கள்.

 

4979. ஈரமின் மனத்தவ ரிடைந்து புட்கர

     மார்தலில் லாமையா லறத்த வித்தலைந்

     தேர்கொள்வாம் பரியினோ டேகி யோர்மலைச்

     சார்புறு கடவையிற் சார்ந்திட் டார்களால்.

68

      (இ-ள்) அவ்வாறு எய்ய, அதனால் அன்பற்ற இதயத்தையுடையவர்களான அந்தக் காபிர்கள் வசங்கெட்டு நீரருந்தாமையினால் மிகவுமிளைத்து அலைந்து அழகைக் கொண்ட தாவிச் செல்லுங் குதிரைகளோடு சென்று ஒரு மலையினது பக்கத்திற் பொருந்திய கடவையிற் சார்ந்தார்கள்.

 

4980. அரியெனப் பின்றொடர்ந் தாண்டோர் வீரன்றன்

     வரைப்புயங் கிழிதர வாளி யெய்தலும்

     வெருவியீ ரத்திரி விடுத்திட் டேகினன்

     வரநிலக் காளையும் வௌவி னாரரோ.

69

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு போய்ச் சேர, சிங்கத்தைப் போலும் பின்பற்றிப் போய் அங்கே ஒரு வீரனாகிய காபிரது மலையைப் போன்ற தோளானது பிளக்கும் வண்ணம் அம்பை எய்த அளவில், அவன் பயந்து இரண்டு ஒட்டகங்களை விட்டு விட்டுப் போயினான். அவற்றை வரத்தைக் கொண்ட நிலத்தையுடைய காளையாகிய அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்களும் பிடித்தார்கள்.