பக்கம் எண் :

சீறாப்புராணம்

1811


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வா றருந்தி மயக்கத்தைத் தரும் பசியை இல்லாமற் செய்து சத்துராதிகளான காபிர்களோடு சத்தமிட்டு எதிராகப் பொருதும் உவளக்கத்தின் பக்கத்திற் சற்குணத்தைப் பொருந்தினவர்களான அசுஹாபிமார்கள் வந்து சேர்ந்தார்கள். தெய்வீகந் தங்கிய செங்கோலைத் தாங்கி இப்பூமியினிடங்களை ஆட்சி செய்து காக்கா நிற்குங் கோமானான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் வந்தார்கள்.

 

4985. சூன்மு கிற்குடை நிழற்றிடச் சுற்றியெம் மருங்கு

     மான்ம தங்கமழ்ந் திடமறை வானவர் வாழ்த்தச்

     சேனை வீரர்க ளொடுஞ்செறிந் தெய்துமப் போதி

     லூனி றைந்திடும் வேல்சல்மா வந்தன ருவந்தே.

74

      (இ-ள்) கருப்பத்தைக் கொண்ட மேகமாகிய கவிகையானது நிழலைச் செய்யவும், கஸ்தூரி வாசனையானது எல்லாப் பக்கங்களிலுஞ் சுற்றிப் பரிமளிக்கவும், தேவர்களான மலாயிக்கத்துமார்கள் புறுக்கானுல் அலீமென்னும் வேத வசனங்களினாற் புகழவும், சேனை வீரர்களாகிய அசுகாபிமார்களோடுங் கூடி அவ்வாறு வந்து சேரும் அந்தச் சமயத்தில், மாமிசமானது நிறையும் வேலாயுதத்தை யுடைய சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள் மகிழ்ந்து அங்கே வந்தார்கள்.

 

4986. கந்த முங்கிய வரைப்புய வானவர் களித்துச்

     சிந்தை கூர்தரப் போற்றிய நாயகர் திருமுன்

     வந்து செம்மல ரடியிணை யிறைஞ்சிவவ் வியதை

     முந்த விட்டனர் துதித்தனர் முறைமுறை வாழ்த்தி.

75

      (இ-ள்) அவ்வாறு வந்த அவர்கள் வாசனையானது முங்கப் பெற்ற மலையைப் போன்ற தோள்களை யுடைய தேவர்களான மலாயிக்கத்துமார்கள் மகிழ்ந்து மனமானது சந்தோஷிக்கும்படி துதித்த நாயகரான நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது அழகிய சந்நிதானத்தின்கண் வந்து சிவந்த தாமரை மலரைப் போன்ற அவர்களது இருபாதங்களிலும் பணிந்து வரிசை வரிசையாக வாழ்த்திப் புகழ்ந்து தாங்கள் பிடித்து வந்த ஒட்டகங்களை அவர்களுக்கு முன்னால் விட்டார்கள்.