|
இரண்டாம்
பாகம்
போக
அலைகளையுடைய சமுத்திரத்தைத் தனக்கு வஸ்திரமாக உடுத்த
பூமியாகிய பெண்ணானவள் நித்திரையை விட்டும்
விழித்தாள். செங்கோலினது ஒழுங்கானது பிசகாத
குரிசிலான நமது நாயகம் நபிகட் பெருமானார் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களும் நித்திரையை விட்டும் விழித்து
எழும்பினார்கள். ஒலிக்கா நிற்குஞ் சமுத்திரத்தைப்
போன்ற சைனியங்களு மெழும்பின.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
4999. பற்றலர்
போட்டி றந்த படைக்கலன் பரிக ளியாவும்
வெற்றிகொள் வீரர் வௌவி விரைந்துமுன் கொணர்ந்த
ளிக்கக்
கற்றைவாற் பாய்மாக் காரன் பங்குமோர் காலாட்
பங்குங்
கொற்றவேல் சல்மா வுக்குக் கொடுத்தனர் பிரிய மாகி.
88
(இ-ள்) அவ்வாறெழ, விஜயத்தைக் கொண்ட
வீரர்களான அசுஹாபிமார்கள் சத்துராதிகளாகிய
காபிர்கள் போட்டுவிட்டு மாண்ட யுத்தாயுதங்கள்,
குதிரைகளாகிய எல்லாவற்றையும் வாரி வேகமாய் நாயகம்
நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது
முன்னிலையிற் கொண்டு வந்து கொடுக்க, அவர்கள்
பிரியமாய் அவற்றில் வெற்றி பொருந்திய
வேலாயுதத்தையுடைய அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு
அவர்களுக்கு மயிர்த்தொகுதியைப் பெற்ற வாலையுடைய ஒரு
குதிரை வீரனது பங்கும் ஒரு காலாட் பங்குங்
கொடுத்தார்கள்.
5000. ஆட்டிறல்
வீரர்க் கெல்லா மருளியச் சுவமீ தேறி
வாட்டிறல் சல்மா வென்னு மன்னரைப் பிறகே வைத்துப்
பூட்டுசெஞ் சிலைக்கை வள்ள னடத்தினர் புயங்கள் விம்ம
நாட்டிய வரித மெல்லாங் கமழ்ந்தன நான வாசம்.
89
(இ-ள்) அன்றியும், புருடர்களில்
வன்மையையுடைய வீரர்களான அசுஹாபிமார்க ளனைவருக்கும்
மற்றதைப் பங்கிட்டுக் கொடுத்துக் குதிரையின் மீது ஏறி
வாளாயுதத்தில் வல்லமையையுடைய சல்மா றலியல்லாகு அன்கு
என்று சொல்லும் அவ்வழகரைப் பின்னால் வைத்து நாணைப்
பூட்டிய அழகிய கோதண்டத்தைத் தாங்கிய கையையுடைய
வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா
அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் இரு தோள்களும் பூரிக்கும் வண்ணம்
நடத்தினார்கள். கஸ்தூரி வாசனையானது நிலைபடுத்தப்பட்ட
திசைக ளெல்லாவற்றிலும் பரிமளித்தது.
|