|
முதற்பாகம்
அனேகவிதமான
அற்புதங்கள் உம்மிடத்தில் வந்து சேர்வதுண்டு. ஆதலால் அத்தகுதிகளையறிந்து உமக்கு
மகிழ்ச்சியுண்டாகுமென்று சொல்லித் துதித்து அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் கிருபையினால்
தங்களது நகரமாகிய பெரிய சுவர்க்கலோகம் போய்ச் சேர்ந்தார்கள்.
425.
ஓடிய சிறுவர்
கானொந் துலைந்திளைத் துடலம் வேர்த்து
வாடிய முகத்திற்
கண்ணீர் மார்பக நனைப்பச் சோர்ந்து
பாடியிற் புகுந்து
தங்கண் மனப்பயங் கரத்தை வந்து
கூடிய பெயருக்
கெல்லாம் வகைவகை கூறு கின்றார்.
35
(இ-ள்)
முன்னர் காட்டினிடமிருந்து ஓட்டம்பிடித்த பாலியர்களெல்லாவரும் கால்கள் வருந்தி உலைந்து
தளர்தலுற்றுச் சரீரமானது வியர்க்கபெற்று வாட்டம் பொருந்திய முகத்தின் வழியோடும்
கண்ணீரானது மார்பிடத்தை நனையும்படி செய்யச் சோர்ந்து தங்கள் ஊராகிய குனையின்
நகரத்தின்கண் நுழைந்து மனசில் தங்கியரா நின்ற பயங்கரத்தை அவ்விடத்தில் வந்து கூடிய
ஜனங்களெல்லாவருக்குந் தரந்தரமாக எடுத்துச் சொன்னார்கள்.
426.
அப்பொழு தப்துல்
லாவும் லமுறத்து மழுது விம்மி
யெய்ப்பொடு
மேங்கி யேங்கி யீன்றவண் முகத்தை நோக்கி
மைப்படுங் கவிகை
வள்ளன் முகம்மதைக் கொன்றா ரென்று
செப்பிய மாற்றக்
கூற்றஞ் செவிப்புக மயங்கி வீழ்ந்தாள்.
36
(இ-ள்)
அந்தச் சமயத்தில் அப்துல்லாவும் லமுறத்துவும் விம்முதலுற்று இளைப்புடன் ஏங்கியேந்தித் தங்களை
யீன்ற தாயாகிய ஹலிமா அவர்களினது முகத்தைப் பார்த்து மேகமானது பொருந்தா நிற்கும்
குடையையுடைய வள்ளலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைக் காட்டினிடமாக இருவர்கள்
வந்து கொலை செய்தார்களென்று சொல்லிய சொல்லாகிய கூற்றம் அவ்வலிமா அவர்களின் காதுகளில்
நுழையவே, மூர்ச்சையாகி பூமியின்கண் விழுந்தார்கள்.
427.
ஆரிது தெருமந்
துள்ளத் தறிவழிந் தாவி சோரக்
காரிகை யலிமா
பூண்ட கலன்பல திசையுஞ் சிந்த
வேரியங் குழன்மா
மேக மின்னென மேனி தேம்பிப்
பாரினிற் புரண்டே
றுண்ட மயிலெனப் பதைக்க லுற்றாள்.
37
(இ-ள்)
ஆரிதவர்கள் சுழற்சியுற்று மயங்கி உயிரானது சோரும்படிக் காரிகையான ஹலிமா அவர்கள்
தரித்திருந்த ஆபரணங்கள் பல திக்குகளிலுஞ் சிதற வாசனை பொருந்திய அழகிய அளகபாரமும்
மேகத்தின்கண் தோற்றா நிற்கும் மின்னலைப் போன்ற சரீரமும் வாட்டமுற்றுப் பூமியின்கண்
ணுருண்டு
|