பக்கம் எண் :

சீறாப்புராணம்

184


முதற்பாகம்
 

மணியானவரே சிந்தையின்கண் பொருந்திய அறிவானவரே! ஆகாயத்தின்கண் குறைபடாமல் பிரகாசிக்கும் அழகிய சந்திரனானவரே! இப்பூலோகத்திற்கெல்லாம் அரசரானவரே! எங்களுடைய வீட்டிற்கு பொருந்திய சம்பத்தானவரே! எமது தருமத்தினது பலனானவரே! யென்று சொல்லிப் புகழ்ந்து கைகளினால் எடுத்துத் தங்கள் மார்போடு மணைத்தார்கள்.

 

431. வடிவுறு மேனி நோக்கி மாமதி வதன நோக்கி

    யுடலுறும் வடுக்கா ணேனிங் குற்றவை யுரைப்பா யென்று

    கொடியிடை யலிமா கூறக் கொடுவரை முழையிற் றோன்று

    மடலுறு சீய மன்ன அகுமது புகல லுற்றார்.

41

     (இ-ள்) கொடிபோலு மிடையினையுடைய ஹலிமா அவர்கள் நபிநாயகமவர்களின் அழகு பொருந்திய சரீரத்தைப் பார்த்தும் பெருமை தங்கிய சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்தும், தேகத்தின்கண் சார்ந்த யாதொரு தழும்புங் கண்டிலேன் ஆதலால் இவ்விடத்தில் சம்பவித்தவை யாவை? அவையை எமக்குச் சொல்லுமென்று கூற, உடனே கொடிய மலையினது குகையில் தோன்றா நிற்கும் வலிமையுற்ற சிங்கத்திற் கொப்பான அஹ்மதென்னுந் திருநாமத்தை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

432. இத்தரு நிழலி லியாங்க ளிருக்கையி லிருவர் வந்தென்

    கைத்தலம் பற்ற நின்ற காளையர் வெருவி யேகப்

    பத்திர மாயென் றன்னைப் படிமிசைக் கிடத்திக் கூன்வாள்

    வைத்துரங் கீண்டல் கண்டேன் மறுத்தொன்றுந் தெரிகி லேனே.

42

     (இ-ள்) இந்த உகாமரத்தினது நிழலில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது இரண்டு வாலிபர்கள் வந்து எனது கைத்தலத்தைப் பிடிக்கவும், என்னோடு கூடி நின்ற சிறுவர்கள் பயந்து நான்கு திசைகளிலும் ஓடிப்போகவும், பின்னர் அவர்கள் என்னைப் பத்திரமாகப் பூமியின்மீது மல்லாந்து கிடக்கும்படி செய்து அவர்களில் ஒருவர்தம் கையிலிருந்து வளைவு பொருந்திய ஒரு வாளை எனது மார்பில் வைத்துக் கீறவுங் கண்டேன். மாறி யாதொன்றும் யான் அறியமாட்டே னென்று சொன்னார்கள்.

 

433. நினைவொடு மெழுந்தேன் பின்னென் னெஞ்சினில் வடுவுங்காணேன்

    மனமகிழ்ந் திருவ ரும்மெய் மகிழ்ச்சியா லெனது சென்னி

    தனையுறத் தடவி முத்திச் சஞ்சலம் வேண்டா நும்பாற்

    கனபுது மைகளுண் டென்றோர் காரணப் பெயரு மிட்டார்.

43