பக்கம் எண் :

சீறாப்புராணம்

214


முதற்பாகம்
 

     524. வில்லுற விசைத்தெறி சரத்தின் வேகமா

        யொல்லையிற் சிலரபு வாவி லோடியே

        மல்லுறு புயன்முகம் மதுவைக் கண்டுநற்

        சொல்லொடுந் தேற்றியுட் டுயர மாற்றினார்.

43

     (இ-ள்) அவ்விதம் அப்துல்முத் தலிபவர்கள் சொல்லிய அச்சொற்களைக் கேட்ட சிலபேர்கள் கோதண்டத்தில் பொருந்தும்படி வைத்து வேகமுற்று வீசாநின்ற அம்பினது தீவிரத்தைப் போல அதிசீக்கிரத்தில் அந்த அபுவாவென்னும் சிற்றூரின் கண் ஓடிப் போய் வலிமை தங்கிய புயங்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து நல்ல மொழிகளுடன் அவர்களைத் தேறும்படி செய்து அவர்களது மனத்தின் கண்ணுள்ள துன்பத்தையும் தணித்தார்கள்.

 

     525. மதிமுக முகம்மதை மக்க மாநகர்ப்

        பதியினிற் கொடுவரப் பார்த்துச் சிந்தைகூர்ந்

        ததிசயித் தப்துல்முத் தலிபு மாமலர்

        பொதிதரு தடப்புயம் பொருந்தப் புல்லினார்.

44

     (இ-ள்) அங்ஙனம் தணித்த அம்மனிதர்கள் சந்திரனையொத்த முகத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை மக்கமாநகரமென்று சொல்லும் பட்டணத்தின்கண் கொண்டுவரப்பார்த்து அப்துல் முத்தலிபவர்கள் தங்கள் மனமானது கூரப்பெற்று அதிசயித்துப் பெருமை தங்கிய புஷ்பங்களினால் மறைபடும் விசாலமுற்ற அந்நபிகணாயக மவர்களின் தோள்களைப் பொருந்தும்படி கட்டி ஆலிங்ஙனஞ் செய்தார்கள்.

 

     526. மண்ணினிற் பதமுறா வள்ள றன்னைத்தன்

        கண்ணெதிர் விட்டக லாத காட்சியா

        யெண்ணியுள் ளகத்தினி விருத்தி யென்குலப்

        புண்ணிய மிதுகொலென் றுவந்து பூரித்தார்.

45

     (இ-ள்) அன்றியும், அப்துல் முத்தலிபவர்கள் பூமியின்கண் பொருந்தாத பாதங்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைத் தங்களது கண்களின் முன்னர் விட்டு நீங்காத தோற்றமாய் நினைத்து மனசினுள் ளிருக்கச் செய்து இப் பிள்ளையானது எங்கள் கோத்திரத்தினது புண்ணியமென்று சொல்லி விரும்பி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்.

 

     527. இலைமலர் கிழிந்துதே னிழிய வாய்மடுத்

        தலகில்வண் டுண்டுபண் ணார்க்குந் தார்ப்புயன்

        கலைதெரி கபீபுல்லா வென்னுங் காளைதன்

        னிலைபெற வாண்டொரே ழாநி றைந்ததே.

46