முதற்பாகம்
புகைறா கண்ட படலம்.
கலி்நிலைத் துறை
539.
மலையெ னத்திரட்
புயனபித் தாலிபு மனையி
லலைக டற்புடை வருமுழு
மணியகு மதுவு
நிலைத ரித்தவெண்
கதிர்மதி நிகரென வளர
வுலைவில் செல்வமும்
வளர்ந்தன வொன்றுபத் தெனவே.
1
(இ-ள்)
மலைபோலும் திரட்சியுற்ற தோள்களையுடைய அபீத்தாலிபவர்களது வீட்டின்கண் அலைகளைப் பெற்ற
சமுத்திரத்தி லுற்பத்தியாகிவராநிற்கும் முழுமையான முத்துப் போன்ற அஹ்மதென்னுந் திருநாமத்தை
யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் மாறாத நிலைமை தாங்கிய வெள்ளிய பிரகாசத்தையுடைய
சந்திரனானது ஒப்பென்று சொல்லும்படி நாளுக்கு நாள் வளர்ந்துவரக் கேடில்லாத சம்பத்துகளும் ஒன்று
பத்தாக வளர்ந்து வந்தன.
540.
சலத ரத்தைநேர்
கரத்தபித் தாலிபு தன்பாற்
குலவு வீரமுங் கல்வியும்
வெற்றியுங் குடியாய்
நலமு றப்புகுந் திருந்தன
நாடொறும் வனசத்
திலகு செல்வியு மிவர்மனை
முன்றில்வீற் றிருந்தாள்.
2
(இ-ள்)
அன்றியும், மேகத்தைப் போலும் ஏழைகளுக் கருளா நிற்கும் கையினையுடைய அபீத்தாலி பவர்களிடம்
விளங்கா நின்ற வலிமையும் அறிவும் விஜயமும் நீங்காது நன்மையானது அதிகரிக்கும்படியாய்ப்
பொருந்தி யிருந்தன. மேலும் தாமரை மலரின்கண் பிரகாசியா நின்ற இலக்குமியும் இவர்களது வீட்டின்
முற்றத்தில் வீறுடன் பிரதிதினமும் அமர்ந்திருந்தாள்.
541.
சுரபி யின்றிரள்
கூன்றொறுத் திரளொடுஞ் சுரந்த
கரிய மேதியின் குலமொரு
பெருங்கடல் கடுப்பப்
பெருகி யோங்கின
கொறிகளும் பல்கின பிறரும்
பருகப் பாறயிர் குறைவறப்
பெரும்பலன் படைத்தார்.
3
(இ-ள்)
அன்றியும், பசுவினது கூட்டங்கள் கூனையுடைய தொறுவினது கூட்டங்களோடும், நிறைந்தன. கரிய
|