பக்கம் எண் :

சீறாப்புராணம்

221


முதற்பாகம்
 

யாவர்களோ? அவரவர்களுக்கெல்லாஞ் சொல்லி ஷாமிராச்சியத்திற்குச் செல்லா நின்ற பாதையை நெருங்கி ஒரு சோலையின்கண் வெளி விடுதியாயிருந்துத் தேனானது சுரக்குகின்ற கூந்தலையுடைய தங்கள் நாயகியார்க்கு இச்சமாச்சாரங்களனைத்தையும் சொன்னார்கள்.

 

545. சொன்ன வாசகங் கேட்டலு முகம்மது துணுக்குற்

    றென்னை யுங்கொடு சாமினுக் கேகுமென் றிசைப்பப்

    பொன்னு நன்கதிர் மணியையும் போர்த்தெடுப் பவர்போல்

    வன்ன வார்கழற் குரிசிலுக் குறுமொழி வகுத்தார்.

75

     (இ-ள்) அபீத்தாலிபவர்கள் அவ்வாறு தங்கள் நாயகியார்க்குச் சொல்லிய வார்த்தைகளை அவ்விடத்திலிருந்த நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் கேட்ட மாத்திரத்தில், அச்சமுற்றுத் தங்களது பெரிய தந்தையாகிய அவர்களைப் பார்த்து என்னையுங்கூட கூட்டிக் கொண்டு ஷாமிராச்சியத்திற்குப் போகுங்களென்று சொல்ல; அதற்கவர்கள் அழகிய நேர்மையான பாதத்தினையுடைய குரிசிலாகிய அந்நபிகணாயகமவர்களைச் சொர்ணத்தையும் நல்ல பிரகாசத்தையுடைய இரத்தின வர்க்கங்களையும் மூடி எடுப்பவர்களைப் போல எடுத்து அவர்களுக்குப் பொருந்திய சில வார்த்தைகளைச் சொல்லுவார்கள்.

 

546. பாதை போவதும் வருவது மெளிதல பரற்கா

    டேத முற்றது சுரத்திடை படுமிடர் கொடிது

    காத நான்கினுக் கொருகர நீருறாக் கடுங்கான்

    வாதை மிக்குள வருமொழி மறுமென மறுத்தார்.

76

     (இ-ள்) தூர தேசங்களுக்குள்ள பாதையினது பிரயாணம் செல்லுவதும் சென்று மீண்டு வருவதும் இலேசான காரியமல்ல. அதிலுமோ நாம் போகிற வழியானது முழுவதும் பரற்கற்கள் நிறைந்த காடு. அன்றியும் துன்பமானது மிகுத்துள்ளது. அங்கு சம்பவிக்கும் வனத்தின் கண்படும் துயரமோ கொடியது. நான்கு காதவழி தூரத்திற்காயினும் ஒரு சிரங்கைத் தண்ணீர் கிடையாத கொடுமை தங்கிய பாலை நிலத்தினது உபத்திரவம் அதிகமாயுள்ளது. ஆதலால் முகம்மதே நீர் எம்முடன் வருகிறேன் என்று சொல்லும் வார்த்தையை மறுத்து விடுமென்று சொல்லி மறுதித்தார்கள்.

 

547. தந்தை சொல்லிய சொல்லினுக் கரியகட் டரளஞ்

    சிந்த நோக்கிய முகம்மது திருமுக நோக்கிப்

    புந்தி நேர்ந்தனை தேற்றவுந் தெளிந்திலை புகழோ

    யெந்த வாற்றினு நிற்பிரிந் தேகல னென்றார்.

77