பக்கம் எண் :

சீறாப்புராணம்

224


முதற்பாகம்
 

553. ஆங்கி ருந்தனர் விடிந்தபி னத்தலத் தொருவ

    னோங்கு மும்முறை நுண்பொரு ளனைத்தையு முணர்ந்து

    தீங்கி லாதமுக் காலமுந் தெளிந்தறி திறலோன்

    றாங்கு மில்லறந் துறவறந் தெரிந்தமா தவத்தோன்.

15

     (இ-ள்) அவ்விதம் யாவர்களும் அந்தப் புசுறாவென்னுந் தலத்தின்கண் அவ்விரா முழுவதுந் தங்கியிருந்தார்கள். சூரியனுதயமான பின்னர் அவ்விடத்தில் ஒரு மனிதன் ஓங்கா நிற்கும் முன்னுள்ள தவுறாத்து சபூர் இஞ்சீலாகிய மூன்று வேதங்களினது நுட்பமான அர்த்தங்களெல்லாவற்றையுந் தெரிந்து குற்றமற்ற கடந்தன நடப்பன வருவன என்னும் முக்காலங்களையு முணர்ந்தறிந்த வலிமையையுடையவனும், மானிடர்கள் தங்கா நிற்கும் இல்லறம் துறவறமென்னு மிரண்டினது இயல்புகளை அறிந்த மகாதவத்தையுடையவனும்.

 

554. நகையு றாவுறூ மெனும்பகுத் தறிவினை நாளும்

    வகையு றாநசு றானிகள் குருக்களின் மதியோன்

    புகையு றாவெனும் பெயரின னெத்திசைப் புறத்தும்

    பகையு றாதசெம் மலர்முக முகம்மதைப் பார்த்தான்.

16

     (இ-ள்) நகையுறாத உறூமென்று சொல்லும் பகுதியிலுள்ள அறிவுகளைப் பிரதிதினமும் வகையுற்ற நசுறானிகளது குருக்களின் மதியையுடை யவனும், புகைறாவென்னும் பெயரை யுடையவனுமான அவ்வொருவன் எத்திசைப் புறங்களிலும் பகைமை பொருந்தாத சிவந்த தாமரைமலர் போலும் முகத்தையுடைய நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைத் தனது கண்களினாற் பார்த்தான்.

 

555. கண்டு நந்நபி மெய்யெழி லிருமலர்க் கண்ணா

    லுண்டு தன்னகங் குளிர்தர வுடலெலாங் களிப்புக்

    கொண்டு வீங்கினன் மறையினிற் கண்டதுங் குலத்தோர்

    பண்டு சொற்றதுங் கேட்டதுங் கனவினிற் பயனும்.

17

     (இ-ள்) அவ்வாறு புகைறாவென்னும் அவ்வொருவன் பார்த்து நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் உடலினது அழகைத் தாமரைமலர் போன்ற இரண்டு கண்களினாலுமருந்தித் தனது மனமானது குளிர்ச்சி பெரும்படி சரீரமெல்லாஞ் சந்தோஷங்கொண்டு பருத்தான். அவ்விதம் பருத்தபின்னர் அவன் வேதங்களிற் பார்த்ததையும், அவன் கோத்திரத்தவர்கள் ஆதியில் சொல்லியதையும், அவன் காதுகளினாற் கேள்வியுற்றதையும், அடிக்கடி பார்த்த சொப்பனத்தின் பயனையும்.