முதற்பாகம்
(இ-ள்) மேலும்
இப்பூலோகத்தின்கண் நபியும் இவரேயல்லாமல் வேறே யொருவருமில்லை. இவ்விடத்தில் இந்த நபிக்குப்
பழுதுகள் எடுத்து முடித்திடும்படி எவர்கள் நினைத்தபோதிலும் அப்பழுதுகள் இவரைப் பொருந்தாது. ஆனால்
இந்த நபியுமோ முதிர்ந்த பிராயத்தை யுடையவரல்லர். சிறு பிராயத்தை யுடையவர். ஆகையினால்
நீர் ஷாம்நகரத்திற்குச் செல்ல வேண்டுமென்று நினைத்த எண்ணத்தை மனசை விட்டும் நீக்கி
விடும். உமது ஊரிற் போய்ச் சேருமென்று தவத்தினையுடைய அப்பண்டிதன் சொன்னான்.
566.
உரைத்த வாசகங் கேட்டபித்
தாலிப்தன் னுளத்திற்
பொருத்த மீதெனச்
சம்மதித் திருக்குமப் போதிற்
றிருத்து நந்நபிக்
குறுபகை விளைத்திடச் சினந்து
நிரைத்தெ கூதிகள்
வந்தடைந் தனர்சிலர் நெருங்கி.
28
(இ-ள்)
அவ்வாறு அந்தப் புகையறாவென்னும் பண்டிதன் சொல்லிய வார்த்தைகளெல்லா வற்றையும் அபீத்தாலி
பவர்கள் தங்களது காதுகளினாற் கேள்வியுற்று மனசின்கண் இஃதுவே பொருத்தமென்று சொல்லி உடன்பட்டிருக்கும்
அந்தச் சமயத்தில், எகூதிகளான சில பேர்கள் யாவர்களையும் நல்ல சன்மார்க்கத்தில் திருத்தாநிற்கும்
நமது பிரான் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுக்குப் பொருந்திய விரோதத்தை விளைத்திடும்படிக்
கோபித்து நெருங்கி வரிசையாக ஆங்கு வந்து சேர்ந்தார்கள்.
567.
அடர்ந்து வந்துநின்
றவர்முகக் குறிப்பையு மவரைத்
தொடர்ந்த மாயவன்
சூழ்ச்சியுங் கொடுமனத் துணிவுங்
கடந்த வார்த்தையுங்
கண்டுபண் டிதனகங் கறுத்து
ளிடைந்து நோக்கினன்
றழற்கதி ரெழவிரு விழியால்.
29
(இ-ள்)
பண்டிதனாகிய அந்தப் புகைறா வென்பவன் அவ்வாறு நெருங்கி அங்கு வந்து நின்றவர்களாகிய எகூதிகளின்
முகத்தினது அடையாளங்களையும், அவர்களைப் பின்பற்றிய வஞ்சகமான கொடிய ஆலோசனையையும்,
கொடுமை தங்கிய அவர்களின் மனசினது தெளிவையும், எல்லை தாண்டிய வார்த்தைகளையும், பார்த்து
வசக்கேடாகிச் சிந்தையினுட் கோபங் கொண்டு இரண்டு கண்களிலும் மிருந்து அக்கினியினது சுவாலையானது
எழும்பும்படி அவ்வெகூதிகளைப் பார்த்தான்.
568.
கடுத்து நோக்கியங்
கவருளங் கலங்கக்கட் டுரைக
ளெடுத்து ரைத்துநன்
னபிதமை வாழ்த்துமென் றிசைத்து
விடுத்திர் நும்மன
நினைவெனக் காபிர்கள் விரைவி
னடுத்த வல்வினைத்
துணிவைவிட் டப்புற மகன்றார்.
30
|