பக்கம் எண் :

சீறாப்புராணம்

233


முதற்பாகம்
 

581. முன்னர் மாமறை முதியவன் சொற்றபின் முறையா

    யிந்நி லத்தெகூ திகள்சில ரடைந்தது மிடரா

    வன்னி தாநசா றாக்கள்வந் ததுவுமுள் ளகத்தி

    லுன்னி னாரபித் தாலிபென் றொழுங்குறு முரவோர்.

43

     (இ-ள்) அப்போது அபீத்தாலிபென்னும் சன்மார்க்கம் பொருந்திய அறிவினையுடையவர்கள் ஆதியில் பெருமை தங்கிய வேதங்களைக் கற்றுத் தேர்ந்த முதியவனான அந்தப் புகைறாவென்பவன் அவ்வாறு சொல்லிய பின்னர் இந்தப் பூமியின் கண் தங்கள்பால் இடராக ஒழுங்காய் எகூதிகளில் சில பேர் வந்து சேர்ந்ததையும் வன்னிதாக நசுறானிகள் வந்து சேர்ந்ததையும் மனசின்கண் நினைத்தார்கள்.

 

582. நன்ன யம்பெறு முகம்மதை மக்கமா நகருக்

    கின்ன ணம்புக விடுத்துமென் றெழிலபித் தாலிச்

    சொன்ன போழ்தினிற் பண்டிதன் முகமதி துலங்கி

    யன்ன தேகருத் தாமெனக் களித்தக மகிழ்ந்தான்.

44

     (இ-ள்) அவ்வாறு நினைத்த அழகிய அபீத்தாலிபவர்கள் நல்ல மேன்மை பொருந்திய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை நான் இந்தப்படியே பெருமை தங்கிய மக்கமா நகரத்திற்கு அனுப்பி வைக்கிறேனென்று சொல்லிய சமயத்தில், பண்டிதனான அப்புகைறாவென்பவன் கேட்டு அதுவே புத்தியாகுமென்று சொல்லித் தனது முகமாகிய சந்திரனானது பிரகாசமுற்றுக் களித்து மனச் சந்தோஷமடைந்தான்.

 

583. வருதி யென்றெழின் முகம்மதைத் தவிசில்வைத் துயர்த்தித்

    திரிகை யின்கனி மோதகத் தொடுசில வெடுத்துப்

    பரிவி னிற்கொடுத் தணிமல ரடியிடைப் பணிந்து

    பொருவின் மக்கமா நகரினிற் புகுமெனப் புகன்றான்.

45

     (இ-ள்) அவ்விதம் சந்தோஷமடைந்த அப்புகைறாவென்னும் பண்டிதன் அழகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை வருவீராக வென்று சொல்லி யழைத்து ஒரு ஆசனத்தின் மேல் இருக்கச் செய்து உயர்த்தியான சில அப்பழவர்க்கங்களுடன் முந்திரிகை மரத்தினது கனிகளையும் எடுத்து அன்போடும் அவர்களுக்கு உண்ணும்படி கொடுத்து அவர்களின் அழகிய தாமரைப் புஷ்பம் போலும் பாதங்களிற்றாழ்ந்து நீர் ஒப்பில்லாத மக்கமா நகரத்திற்குத் திரும்பிப் போகுமென்று சொன்னான்.