பக்கம் எண் :

சீறாப்புராணம்

234


முதற்பாகம்
 

584. சிலைசு மந்தொளிர் புயத்தபித் தாலிபு செழுங்க

    மலைகு டிக்குறு மனையபூ பக்கரை வாழ்த்தி

    நலனு றும்படி முகம்மதை மக்கமா நகரிற்

    கலைவி னல்வழிக் கொடுசெலு மெனவனுப் பினரே.

46

     (இ-ள்) அப்பொழுது வில்லைத் தாங்கி யொளிரா நிற்கும் தோள்களையுடைய அபீத்தாலிபவர்கள் இலக்குமியானவள் வாசஞ் செய்யா நின்ற செழுமை தங்கிய வீட்டினையுடைய அபூபக்க ரவர்களை ஆசீர்வதித்து மக்கமாநகரத்திற்கு நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை நன்மை பொருந்தும்படி வருத்தமில்லாத நல்ல பாதைகளோடுங் கூட்டிக் கொண்டு போகுமென்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

 

585. அண்ண லைச்செழு மக்கமா நகரினுக் கனுப்ப

    வண்ண வார்கழ லடலபித் தாலிபு மறையின்

    பண்ண மைந்தவாய் முதியவற் கிவையெலாம் பகர்ந்து

    கண்ண கன்பொழிற் சாமினுக் கெழுந்தனர் கடிதின்.

47

     (இ-ள்) அழகிய நேர்மையான பாதங்களையுடைய வலிமை தங்கிய அபீத்தாலிபவர்கள் பெருமையிற் சிறந்தோரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை அவ்வாறு செழுமை பொருந்திய திருமக்கமா நகரத்திற்கு அனுப்பிவிட்டு வேதங்களினது இசைகளானவை அமையப்பெற்ற வாயினையுடைய முதியவனான அந்தப் புகைறாவென்பவனுக்கு இச்சமாச்சாரங்க ளனைத்தையுஞ் சொல்லி விசாலமுற்ற சோலைகளையுடைய சாம்நகரத்திற்குப் பிரயாணமாய் விரைவாக எழும்பினார்கள்.

 

586. குன்றுங் கானமு மடவியுஞ் சுரங்களுங் குறுகிப்

    பொன்றி லாப்புகழ்ச் சாமெனும் பதியிடைப் புகுந்தே

    யொன்று நாலென வாணிபத் தொழின்முடித் தொடுக்கி

    வென்றி கொண்டெழுந் தனரது னான்கிளை வேந்தர்.

48

     (இ-ள்) அவ்வாறு எழும்பிய அதுனான் கிளையினது அரசரான அபீத்தாலிபவர்கள் மலைகளையும் காடுகளையும் சோலைகளையும் பாலை நிலங்களையும் நெருங்கி நடந்து சென்று அழியாத கீர்த்தியையுடைய சாமென்று சொல்லும் நகரத்தின்கண் நுழைந்து ஒன்றுக்கு நாலென்று சொல்லும்படி வியாபாரத் தொழில்களனைத்தையும் முடிவு செய்து ஒடுக்கிக் கொண்டு தங்களது நகரமாகிய மக்காப்பதிக்கு வெற்றியுடன் பிரயாணமானார்கள்.