பக்கம் எண் :

சீறாப்புராணம்

235


முதற்பாகம்
 

587. எழுந்து சாமெனும் பதியைவிட் டிருஞ்சுரங் கடந்து

    பொழிந்த சாரலிற் பொருப்பிட மனைத்தினும் பொங்கி

    வழிந்து பாய்தரு மருவியுங் கண்டுள மகிழ்ந்து

    செழுந்த டம்பொழின் மக்கமா நகரினைச் சேர்ந்தார்.

49

     (இ-ள்) அபீத்தாலிபவர்கள் அவ்வாறு அந்தச் சாமென்று சொல்லும் நகரத்தை விட்டும் பிரயாணமாகிப் பெரிதான பாலை நிலங்களையுடைய காடுகளெல்லா வற்றையுந் தாண்டிப் பெய்த சாரலினால் மலைகளினிட முழுவதும் பொலிவுற்று வழிந்து பாயா நிற்கும் ஆறுகளையும் பார்த்து மனக்களிப்படைந்து நடந்து சென்று செழிய தடாகங்களையும் சோலைகளையுமுடைய தங்களது நகரமாகிய பெருமைத் தங்கிய மக்காப்பதியைப் போய்ச் சேர்ந்தார்கள்.

 

588. அறநெ றிக்குயி ராயபித் தாலிபு மடுத்தோர்க்

    குறுபொ ருட்கொடுத் திரவலர்க் கின்னமு தூட்டி

    யிறைவ னன்மறை முதியவர் வேட்டவை யீய்ந்து

    மறுவில் வண்புகழ் முகம்மதை யினிதொடும் வளர்த்தார்.

50

     (இ-ள்) அவ்விதம் போய்ச் சேர்ந்த அபீத்தாலிபவர்கள் தருமத்தினது பாதைகளுக்கு ஜீவனாகத் தங்களை நெருங்கியவர்களுக்கு மிகுந்த திரவியங்களையீந்தும் யாசகர்கட்கு இனிமை பொருந்திய அன்ன முதலியவைகளையுண்பித்தும், இறையவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவினது நன்மை பொருந்திய வேதபாராயண முதியவர்கட்கு அவர்கள் விரும்பியவைகளைக் கொடுத்தும், குற்றமற்ற வளமையான கீர்த்தியையுடைய நபிமுகம்மது முஸ்தபா றசூல்சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை இன்பமுடன் வளர்த்து வந்தார்கள்.

 

589. கான றைப்பொழில் சூழ்தரச் சிறந்தமக் காவிற்

    றான வனரு டழைத்தெழு முகம்மது தனக்கு

    வானர் வந்திரு செம்மல ரடியிணை வருட

    வான நல்வய தொருபதி னான்குசென் றனவே.

51

     (இ-ள்) அப்போது வாசனை பொருந்திய தேனையுடைய சோலைகள் வளைந்த சிறப்புத் தங்கிய மக்கமா நகரத்தில் தானவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவினது கிருபையானது தழைப்புற்று ஓங்கா நிற்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு தேவர்களாகிய மலாயிக்கத்து மார்கள் ஆகாயத்தின் கண்ணிருந்து இறங்கி வந்து சிவந்த தாமரைப் புஷ்பம் போலு மிரண்டு பாதங்களையுந் தடவக் கூடிய நன்மையுற்ற ஒப்பில்லாத வயசுகளானவை பதினான்கு கழிந்தன.