முதற்பாகம்
590.
அந்த நாளினின் மக்கமா
நகரினை யடுத்து
வந்த தோர்படை கயிசென
வரும்பெருங் கூட்டந்
தந்த மில்விடுத்
தனைவரு மோரிடஞ் சார்ந்து
சிந்தை நொந்துவன்
மறமற வொடுங்கினர் திகைத்தே.
52
(இ-ள்)
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கட்கு வயசு பதினான்கு கழிந்த அந்தக் காலத்தில் கயி
சென்று சொல்லும்படி வரும் பெரிய திரளாகிய ஒரு சேனையானது மக்கமா நகரத்தைச் சமீபித்து வந்து
நெருங்கியது. அதைக் கண்ட அம்மக்கமா நகரத்திலுள்ள அனைவர்களும் பிரமித்து தங்கள் தங்கள்
வீட்டை விட்டும் வெளிப்பட்டு ஓரிடத்தில் கூடி மனம் வருந்தி தங்களின் வீரமுழுவது மற்றுப்
போகும்படிச் சோர்வடைந்தார்கள்.
591.
கலக்க முற்றவ ரெவரெவ
ரெனச்சிலர் கடுத்து
நலக்க முற்றிடப்
பொருகுவ மியாமென நவில்வார்
நிலைக்கு மோநிலை
யாதுநம் படையென நிகழ்வா
ரலக்க ழிந்தொரு
மொழியுரைத் தனரனை வருமே.
53
(இ-ள்)
அவ்வாறு கூடியவர்களில் சில பேர்கள் இச்சேனைக்குப் பிரமித்துச் சஞ்சலப் பட்டவர்கள் நம்மில்
யாவர்களென்று சொல்லிக் கோபித்து நாமனைவோரும் நல்லப்புத்தி யுறும்படி அவர்களோடு எதிர்த்து
நின்று யுத்தஞ் செய்குவோமென்று சொல்லுவார்கள். சில பேர்கள் அச்சேனைக்கு நமது சேனை எதிர்த்து
நின்று யுத்தஞ் செய்வதற்கு நிலைபெறுமா? நிலைபெற மாட்டாதே யென்று நிகழ்வார்கள். இவ்வாறாக
ஒருவருக்கொருவர் பேசித் துன்பப்பட்டுப் பின்னர் யாவர்களு மொருங்கு சேர்ந்து ஒரு வார்த்தை
சொன்னார்கள். (எவ்விதமெனில்)
592.
சந்த மான்மதங்
கமழ்புய அப்துல்லா தவத்தால்
வந்த பேரொளி வெற்றிவெம்
புலிமுகம் மதுவை
நந்த மூரவ ரினப்படை
யுடன்கொடு நடந்தா
லிந்த வல்வினைப்
பகையிடர் தவிர்ந்திடு மெனவே.
54
(இ-ள்)
சந்தனமும் கஸ்தூரியும் பரிமளியா நிற்கும் தோள்களையுடைய அப்துல்லா அவர்களின் தவத்தினால்
இவ்வுலகத்தின்கண் தோற்றமாகி வந்த பெரிய பிரகாசத்தையும் விஜயத்தையுமுடைய வெவ்விய புலியான
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை நமது ஊரவர்களான கூட்டமாகிய சேனையோடும் நாம்
கொண்டு யுத்தத்திற்குச் செல்குவோமேயானால் இந்தக் கொடிய செயலையுடைய பகைமையான துன்பம் நீங்கிச்
சுகம் பெறுவோமென்று சொன்னார்கள்.
|