பக்கம் எண் :

சீறாப்புராணம்

239


முதற்பாகம்
 

பாதைபோந்த படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

 

597. குரைகட லனைய செல்வக் குறைசியின் குலத்து நாப்ப

    ணரசிளங் குமர ரான அப்துல்லா வரத்தில் வந்த

    முருகவி ழலங்கற் றிண்டோண் முகம்மது தனக்குச் சார்ந்த

    திருவய திருபத் தைந்து நிறைந்தன சிறக்க வன்றே.

1

     (இ-ள்) ஒலியா நிற்கும் சமுத்திரத்தைப் போன்ற சம்பத்துகளையுடைய குறைஷிகளினது கூட்டத்தின் நடுவில் இளவரசுப் பட்டம் பெற்றிருந்த குமாரரான அப்துல்லா அவர்களின் வரத்தினால் இப்பூலோகத்தின்கண் உதயமாகி வந்த வாசனையானது கமழப் பெற்ற புஷ்ப மாலையணிந்த திண்ணிய புயங்களையுடைய நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுக்குத் தெய்வீகம் பொருந்திய வயசுகளானவை சிறப்பாக இருபத்தைந்து பூரணப்பட்டன.

 

598. பேரறி வெவையுஞ் செம்மை பெருத்தொளிர் வனப்பும் வெற்றி

    வீரமுந் திறலு முண்மை விளங்கும்வா சகமுங் கல்விச்

    சாரமுங் பொறையு மிக்க தருமநற் குணமு மியார்க்கும்

    வாரமு முகம்ம தின்பால் வந்தடைந் திருந்த தன்றே.

2

     (இ-ள்) அப்போது நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களிடத்திதல் பெருமை தங்கிய எல்லா அறிவுகளும், செவ்வையானது மிகுத்துப் பிரகாசியா நிற்கும் அழகும், வெற்றியைத் தராநின்ற வீரமும், ஜெயமும், சத்தியம் விளங்குகின்ற வாசகமும், கல்வியனது சாரமும், அதிக பொறுமையும், தருமத்தினது நல்ல குணமும், எல்லா மனிதர்களிடத்திலும் கிருபையுமாகிய சகல நற்கருமங்களும் வந்து குடியாகப் பொருந்தியிருந்தன.

 

599. பாரினி லடங்கா விண்ணோர் பன்முறை பெரிதிற் கூண்டு

    சீருறை பாத காப்புற் றிருப்பது தெரியக் காணா

    ரூரவர் போலுந் தங்கைக் குறுபொரு ளின்மை யெண்ணங்

    காருறு கவிகை வள்ளற் கருத்திலங் குருத்த தன்றே.

3