|
முதற்பாகம்
வரத்துமாய் வாசனைதங்கிய
சிவந்த தாமரை மலர்போலும் அழகிய பாதங்களின் சுவடானது பூமியின்கண் தோன்றாது நடத்தலைச் செய்தார்கள்.
621.
இப்படி நிகழ்கா லத்தோ
ரிளவன்மா மறைக்கு வல்லான்
மைப்படி கவிகை
வள்ளல் வனப்பிலக் கணமு நீண்ட
கைப்படு குறியுஞ் சேர்ந்த
கதிர்மதி முகமு நோக்கிச்
செப்பிடற் கரிய
வோகைத் திருக்கட லாடி னானே.
25
(இ-ள்)
இந்தவிதமாக நடக்கின்ற காலத்தில் ஒரு இளம்பிராயத்தையுடையவனான பெருமைதங்கிய மூன்று வேதங்களிலும்
வல்லமையுள்ள ஒரு பண்டிதன் மேகங்களானவை அமையப் பெற்ற குடையினையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களின் அழகினது இலக்கணத்தையும், நீட்சியுற்ற கைகளிற் பொருந்தும் அடையாளங்களையும்
பிரகாசமிசைந்த சந்திரன் போன்ற முகத்தையும் பார்த்துச் சொல்லுதற்கரிதான சந்தோஷமென்னும்
அழகிய சமுத்திரத்தின் கண் மூழ்கினான்.
622.
பெரியவன் றூத ராகப்
பிறந்தொரு நபிபிற் காலம்
வருகுவர் சரத மென்ன
மறையுண ரறிவர் கூடித்
தெரிதர வுரைத்த தெல்லா
மிவரெனத் தேறும் வாளா
லிருளறுத் துண்மை
யாபுள் ளிருத்தினன் பெருத்த நீரான்.
26
(இ-ள்)
அவ்வாறு மூழ்கிய மிகுத்த குணத்தையுடைய அப்பண்டிதனானவன் வேதங்களைக் கற்றறிந்த அறிவினையுடைய
யாவர்களும் ஒருங்கு சேர்ந்து பிற்காலத்தில் பெரியவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாக
ஒரு நபியானவர் இந்தப் பூமியின்கண் உதயமாகி வருகுவார், இது சத்தியமென்று அனைவர்களும் அறியும்படி
சொல்லியதெல்லாம் இவர்தாமென்று தேறா நின்ற ஓர் வாளினால் மனசின் கண்ணுள்ள அந்தகாரத்தை
அறச்செய்து மெய்மையாயிருக்கும்படி செய்தான்.
623.
கண்டவ னுளத்தி னூடு
கண்கொளா வுவகை பொங்கிக்
கொண்டுகொண் டெழுந்து
சென்று குவைலிது மனையு ளாகி
வண்டுகண் படுக்குங்
கூந்தன் மடமயில் கதிசா வென்னு
மொண்டொடி திருமுன்
முந்தி யொதுக்கிவாய் புதைத்துச் சொல்வான்.
27
(இ-ள்)
அவ்வாறு நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் ரூபலாவண்ணிய முதலியவைகளைப் பார்த்தவனான
அப்பண்டிதன் தனது மனசினகம் இடங்கொள்ளாத சந்தோஷத்தைப் பெற்று அச்சந்தோஷமானது உள்ளேயடங்காது
|