|
முதற்பாகம்
அதிகரித்துக் கொண்டு
எழும்பி நடந்து போய் குவைலிதென்பவன் வீட்டினகமாகி தேனீக்கள் நித்திரை செய்யா நிற்கும்
அளகபாரத்தையுடைய இளமயில் போன்ற கதீஜாவென்று சொல்லும் ஒள்ளிய வளையல்களைத் தரித்தவரின்
திருச் சந்நிதானத்தில் தனது முன்றானையை ஒதுக்கி வாயினைக் கைகளால் பொத்திக் கொண்டு
சொல்வான்.
624.
குவைலிது தவத்தின்
பேறே குரைகடன் மணியே நீண்ட
புவியிடை யமுதே
பொன்னே பூவையர்க் கரசே யென்றன்
செவியினிற் பெரியோர்
கூறுஞ் செய்தியாற் றேர்ந்து தேர்ந்த
கவினுறும் புதுமை யிந்நாட்
கண்டுகண் களித்தே னென்றான்.
28
(இ-ள்) குவைலி
தென்பவரின் தவத்தினது செல்வமானவரே! ஒலியா நின்ற சமுத்திரத்தின்கண் தோன்றிய மணியானவரே!
நீட்சியுற்ற இந்தப் பூமியின்கண் அமுதமானவரே! இலக்குமியானவரே! குயில் போலும் பெண்களானவர்க்கு
வேந்தரானவரே! எனது காதுகளில் பெரியோர்கள் சொல்லும் வார்த்தைகளாற் றெளிந்து அறிந்த அழகு
பொருந்திய ஓரதிசயத்தை இன்றைய தினம் யான் பார்த்துக் கண்களானவை சந்தோஷமடையப் பெற்றேனென்று
சொன்னான்.
625.
வன்மன நஸ்றா வென்ன
வருபெருங் குலத்திற் றோன்றிப்
பன்முறை மறைக டேர்ந்த
பண்டிதன் முகத்தை நோக்கி
நின்மனந் தேறக்
கண்ட புதுமையை நினைவ றாமற்
சொன்மென மயிலே
யன்னார் சொற்றபி னவனுஞ் சொல்வான்.
29
(இ-ள்)
அவன் அவ்வண்ணம் சொல்லவே, மயில்போலுஞ் சாயலையுடையவரான கதீஜா வென்பவர் வன்மையாகிய மனத்தினையுடைய
நஸ்றாவென்று சொல்லும்படி வராநிற்கும் பெரிய கூட்டத்திலுதயமாகி வேதங்களைப் பலதடவையுங் கற்றுத்
தேர்ந்த அப்பண்டிதனின் முகத்தைப் பார்த்து உனது மனமானது தேறும்படி நீ பார்த்த அற்புதத்தை ஓர்மை
மாறாது சொல்லுவாயாகவென்று சொன்ன பின்னர் அப்பண்டிதனும் சொல்ல ஆரம்பித்தான்.
626.
முல்லைவெண் ணகையாய்
தொன்னாண் முறைமுறை மறைகளெல்லாம்
வல்லவர் தெளிந்த
மாற்ற மக்கமா நகரிற் பின்னா
ளெல்லையில் புதுமை
யாயோ ரிளவல்வந் துதித்திப் பாரிற்
பல்லருந் தீனி லாகப்
பலன்பெற நடக்கு மென்றும்.
30
|