பக்கம் எண் :

சீறாப்புராணம்

249


முதற்பாகம்
 

      (இ-ள்) முல்லை மலர்போலும் வெள்ளிய பற்களையுடைய கதீஜாவே பழைய காலத்தில் வரிசைவரிசையாகிய வேதங்க ளெல்லாவற்றையுங் கற்றுத் தெளிந்த வல்லமையுள்ள பண்டிதர்களின் வார்த்தைகளாவன பிற்காலத்தில் மக்கமாநகரத்தின் கண் அளவில்லாத அற்புதமாய் ஓரிளவலானவர் வந்து தோன்றி இப்பூமியினுள் பலமனிதர்களும் அவரது மார்க்கமாகிய தீனுல் இஸ்லாத்தி லாகும்படி பயன்பெற நடக்குமெனவும்.

 

627. ஈறிலா னபியாய்த் தோன்று மெழின்முகம் மதுதன் மெய்யின்

    மாறிலாக் கதிருண் டாகி மான்மதங் கமழு மென்றுஞ்

    சேறிலாங் ககில மீதிற் றிருவடி தோயா தென்றுங்

    கூறிலாப் பிடரின் கீழ்பாற் குறித்தலாஞ் சனையுண் டென்றும்.

31

     (இ-ள்) அளத்தலினாற் கடைகண் டறிதற்கரிதான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் நபியாக உதயமாகும் அழகிய அந்நபி முகம்மது என்பவரின் சரீரத்தில் மாறாத பிரகாசமுண்டாகிக் கஸ்தூரி வாசனையானது பரிமளிக்கு மெனவும், சேற்றிலும் பூமியின் மீதிலும் நடப்பதினால் அவரது அழகிய பாதங்கள் தோயாதெனவும், பிரிவற்ற பிடரியின் கீழ்பக்கத்தில் குறிக்கப்பட்ட முத்திரையானது ஒன்றுண்டெனவும்.

 

628. வியனுறு புறுக்கா னென்னும் வேதமொன் றிறங்கு மொன்றுங்

    குயின்மொழிப் பவளச் செவ்வாய்க் கொடியிடைக் கருங்கட் பேடை

    மயிலினை யிந்த வூரின் மணமுடித் திடுவ ரென்றும்

    நயனுறக் கேட்டே னின்றென் னயனங்கள் குளிரக் கண்டேன்.

32

     (இ-ள்) அற்புதமிகுந்த புறுக்கானுல் அலீமென்னும் ஒரு வேதமானது அவருக்குக் கடவுளிடத்திலிருந்து இறங்குமெனவும், குயில் போன்ற வார்த்தைகளையும் பவளம் போன்ற சிவந்த வாயினையும் கொடி போன்ற இடையினையு முடைய கரிய நிறந்தங்கிய கண்களைப் பெற்ற ஒரு பெண்ணாகிய மயிலினை இந்தத் திருமக்கமா நகரத்தின்கண் விவாக முடித்திடுவாரெனவும், நன்மை பொருந்திய காதுகளினாற் கேள்வியுற்றேன். அவ்விதமே இன்றையதினம் எனது கண்கள் குளிர்ச்சியடையும்படி பார்க்கவுஞ் செய்தேன்.

 

629. முன்னுணர்ந் தவரைக் கேட்டு முதலவன் மறைக டேர்ந்தும்

    நின்னையொப் பவரு மில்லை யாகையா னினது பாலம்

    மன்னைவிண் ணப்பஞ் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும்

    பொன்னனீ ரென்னப் போற்றிப் புகழ்ந்தன னெகிழ்ந்த நெஞ்சான்

33