|
முதற்பாகம்
632.
கண்டுகண் களித்துள்
ளஞ்சிக் கரகம லங்கள் கூப்பி
யொண்டொடி கதிசா
வென்னு மோவிய முரைத்த மாற்றம்
விண்டுவிண் ணப்பஞ்
செய்தான் விரைகம ழலங்கற் றிண்டோட்
கொண்டறன் செவியு
நெஞ்சுங் குறைவறக் குளிர வன்றே.
36
(இ-ள்)
அவ்வாறு பார்த்து இரண்டு கண்களும் களித்து மனமானது பிரமிக்கப் பெற்றுத் தனது கைகளாகிய இரண்டு
தாமரை மலர்களையுங் குவித்து வணங்கி ஒள்ளிய வளையல்களை யணிந்த கதீஜாவென்று சொல்லுஞ் சித்திரப்பாவை
யானவர் சொல்லிய வார்த்தைகளை வாசனையானது பரிமளிக்காநின்ற மலர்மாலையணிந்த திண்ணிய
புயங்களையுடைய மேகமாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் காதுகளும் மனமும் குறைவில்லாது
குளிர்ச்சி யடையும்படி தனது வாயினைத் திறந்து விண்ணப்பஞ் செய்தான்.
633.
கூறிய கூற்றைக் கேட்டுக்
குறித்துள கரும மின்று
மாறிலா தடைந்த தென்ன
முகம்மது மனத்தி லுன்னித்
தேறியங் கெழுந்து
போந்தார் தேனினு மதுர மாறா
தூறிய தொண்டைச் செவ்வா
யொண்ணுதன் மனையி லன்றே.
37
(இ-ள்)
அவ்வாறு அவ்வேவற்காரன் சொல்லிய சமாச்சாரத்தை நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
தங்கள் காதுகளினால் கேள்வியுற்று நாம் முன்னர் கருதிட்டுள்ள காரியம் இன்றைய தினம் தவிர்தலில்லாது
நமதுபால் சேர்ந்தென்று மனசின்கண் நினைத்துத் தெளிதலடைந்து அவ்விடத்திலிருந்து மெழும்பித் தேனைப்பார்க்கிலும்
இனிமையானது மிக நீங்காது சுரந்த தொண்டைக்கனிபோலுஞ் சிவந்த வாயினையும் ஒள்ளிய நெற்றியையு
முடைய கதீஜா வென்பவரின் வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.
634.
சித்திர வனப்பு
வாய்ந்த செம்மறன் வரவு நோக்கிப்
பத்திரக் கருங்கட்
செவ்வாய்ப் பைந்தொடி பதும ராக
முத்தணி நிரைத்த
பீட முன்றிலிற் காந்தட் கையால்
வைத்திவ ணிருமென்
றோத முகம்மது மகிழ்ந்தி ருந்தார்.
38
(இ-ள்)
அவ்விதம் போய்ச் சேரவே, அம்பைப் போன்ற கண்களையும் சிவந்த வாயினையும் பசிய தொடிகளையுமுடைய
கதீஜாவானவர் சிறந்த அழகானது வாய்க்கப் பெற்ற செம்மலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களின் வரவைப் பார்த்துத் தமது காந்தட் புஷ்பம் போலுங் கைகளினால் பதுமராகங்களையும் முத்துக்களையும்
அலங்காரமாக வரிசைபடுத்தப்பட்ட ஓராசனத்தை யெடுத்து முற்றத்தில் வைத்து
|