பக்கம் எண் :

சீறாப்புராணம்

252


முதற்பாகம்
 

இவ்விடத்திலிருங்களென்று கூற, நபிகணாயகமவர்களும் சந்தோஷமுற்று அவ்வாசனத்தின் மீதிருந்தார்கள்.

 

635. எரிமணித் தவிசின் மேல்வந் திருந்தலக் கணமும் பொற்புந்

    திருவுறை முகமு மன்பு திகழ்தரு மகமுங் கண்ணும்

    விரிகதிர் பரந்த மெய்யும் விறல்குடி யிருந்த கையு

    மருமலர் வேய்ந்த தோளு மணிதிரண் டனைய தாளும்.

39

     (இ-ள்) அவ்வாறு நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் பிரகாசியா நிற்கும் இரத்தின வர்க்கங்களை நிரைத்த அவ்வாசனத்தின் மீது வந்திருந்த இலக்கணமும் அவர்களின் அழகும் தெய்வீகந்தங்கிய முகமும் கிருபையானது விளங்கிய மனமும் கண்களும் விரிவான கிரணங்கள் பரப்புற்ற சரீரமும் வெற்றியானது குடியாயிருக்கப் பெற்ற கைகளும் வாசனை பொருந்திய புஷ்பமாலை யணிந்த தோள்களும் இரத்தினங்க ளொன்றோடொன்று திரண்டாற் போன்ற பாதங்களும்.

 

636. பேரொளி பரப்பிப் பொங்கிப் பெருகிய வழகு வெள்ளச்

    சார்பினிற் கதிசா வென்னுந் தையறன் கரிய வாட்கட்

    கூருடைக் கயல்க ளோடிக் குதித்தன குளித்துத் தேக்கி

    வாரிச வதனஞ் சோர்ந்து மறுக்கமுற் றிருந்த தன்றே.

40

     (இ-ள்) பெரிய பிரகாசத்தை நானா பக்கமும் பரவச் செய்து அதிகரித்துப் பெருகிய அழகென்னும் பிரவாகத்தின்கண் கதீஜா வென்று சொல்லும் பெண்ணானவரின் கரிய நிறத்தைக் கொண்ட வாட்படைபோலுங் கூரிய கண்களென்னும் கெண்டை மீன்கள் ஓடிப்போய்ச் சாடின. அவ்விதம் சாடி அப்பிரவாகத்தின் கண் மூழ்கித் தெவிட்டுதலடைந்து தாமரைமலர் போலும் முகத்திற் சேர்ந்து மறுக்கமடைந்திருந்தன.

 

637. பார்த்தகண் பறித்து வாங்கப் படாமையா னறவஞ் சிந்தப்

    பூத்தகொம் பனைய மெய்யி னாணெனும் போர்வை போர்த்துக்

    கூர்த்தவா வெளிப்ப டாமற் கற்பெனும் வேலி கோலிச்

    சேர்த்ததன் னுளங்கா ணாது திருந்திழை வருந்தி நின்றாள்.

41

     (இ-ள்) திருந்திய ஆபரணங்களையுடைய கதீஜாவானவர் அவ்வாறு நோக்கிய கண்களைத் திரும்பப் பறித்து வாங்க முடியாமையினால் தேனைச் சொரியும்படி பூத்த கொம்பைப் போலும் சரீரத்தின்கண் வெட்கமென்னும் போர்வையைப் போர்த்து மிகுந்த காதலானது வெளிவராமல் கற்பென்னு மதிலை வளைத்துப் பொருந்திய தங்கள் மனமானது போதாது துன்பமுற்று நின்றார்கள்.