|
முதற்பாகம்
644.
தன்மனத் துறைந்த
காத றனைவெளிப் படுத்தி டாமற்
செம்மலு மிருந்தார்
மற்றைச் சிலபகல் கழிந்த பின்னர்
மும்மதம் பொழியு நால்வாய்
முரட்கரி யபித்தா லீபு
விம்மிதப் புயம்பூ
ரிப்ப மைந்தனை விளித்துச் சொல்வார்.
48
(இ-ள்)
செம்மலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் அவ்வாறு தங்களது மனசின்கண் தங்கிய
மோகத்தை வெளிப்படுத்தாதிருந்தார்கள். அவ்விதமாகச் சிலநாள் சென்றபின்னர்க் கன்னம் கபோலம்
கோசமென்னும் மூன்று மதங்களையும் பொழியாநிற்கும் நாலப்பெற்றவாயினையும் வலிமையையுமுடைய யானைபோன்ற
அபீத்தாலிபவர்கள் தங்களது விம்மிதங்கொண்ட இரண்டுதோள்களும் பூரிக்கும்படி மகனாரான நபிகணாயக
மவர்களைக் கூப்பிட்டுச் சொல்லுவார்கள்.
645.
தெரிதரத் தெளிந்த
சிந்தைத் தேமொழி கதிசா பாலில்
விரைவினிற் சென்று
செம்பொன் விளைவுறச் சிறிது கேட்போ
மருளொடு மீய்ந்தா
ரென்னி லதற்குறு தொழிலைக் காண்போம்
வரையற விலையென்
றோதில் வருகுவம் வருக வென்றார்.
49
(இ-ள்)
யாவையும் அறியும்படி தெரிந்த மனசினைப் பொருந்திய தேன்போலும் வார்த்தைகளையுடைய கதீஜா வென்பவரிடம்
நாம் சீக்கிரத்தில் பயனுறும்படி போய் கொஞ்சம் செந்நிறத்தையுடைய திரவியங் கேட்போம்.
கிருபையோடும் கொடுப்பரேயானால் அதற்குப் பொருந்திய கச்சவடத் தொழிலைச் செய்குவோம்.
தீரவேயில்லையென்று சொன்னால் திரும்பி வந்திடுவோம். வாருமென்று சொன்னார்கள்.
646.
உரைத்திடுந் தந்தை
மாற்றஞ் செவியுற வுவகை பொங்கி
விரைத்தகாக் குழற்க
தீசா மெல்லிழை நினைவு நெஞ்சும்
பொருத்திய வகத்தி
னூடு புக்கிடத் திருவாய் விண்டு
கரைத்தனர் நாளைக்
காண்போங் கருதிய கரும மென்றே.
50
(இ-ள்)
அவ்வாறு சொல்லிடும் பெரியதந்தையாகிய அபீத்தாலிபவர்களின் வார்த்தையானது நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்களின் காதுகளிற்போய்ப் பொருந்த சந்தோஷமானது பெருகி வாசனைதங்கிய சோலைபோலுங்
கூந்தலையுடைய கதீஜாவென்னும் மெல்லிய ஆபரணங்களைத் தாங்கியவரின் எண்ணத்தையும் நெஞ்சத்தையும்
பொருந்திய மனத்தினகம் புகுந்திடும்படித் தங்களது தெய்வீகம் பொருந்திய வாயினைத் திறந்து நாம்
நினைத்த காரியத்தை நாளைய தினம் போய்ப் பார்ப்போமென்று சொன்னார்கள்.
|