முதற்பாகம்
780.
ஆதி நாயகன்
றிருவொளி வினிலவ தரித்த
வேத நாயக மேயுமைக்
கண்டதால் விளைத்த
பாத கம்பல
தவித்துமுற் பவங்களை யறுத்துத்
தீதி லாதநற்
பதவியும் படைத்தனன் சிறியேன்.
13
(இ-ள்)
அன்றியும், யாவற்றிற்கும் முதலிறைவனான ஜல்லஜலாஹூவத்த ஆலாவின் அழகிய பிரகாசத்தில் நின்று
முதயமாகிய சகல வேதங்களுக்கும் நாயகமான நபிகள் பெருமானே! சிறியவனாகிய யான் இன்று எனது
கண்களால் தங்களைத் தரிசித்ததினால் யான் செய்த பலவிதத் துரோகங்களை யொழித்து முன்னுள்ள
பாவங்களையு மறுத்துக் குற்றமில்லாத நல்ல முத்தியையும் சம்பாதித்தேன்.
781.
என்று கூறியிம்
மலரடி யிணையினை யெளியே
மென்று காண்குவ
மோவென வயர்ந்துடைந் தெண்ணி
யென்று மின்றுபோற்
காண்குவ மெனமனத் திருத்தி
யென்றுந்
தீன்பயிர் விளங்குற வாழியென் றிசைத்தே.
14
(இ-ள்)
என்று சொல்லி இந்தத் தாமரைப் புஷ்பம் போலும் இருபாதங்களையும் எளியேமாகிய யாம் இனி
எக்காலம் தெரிசிப்போமென்று மிகத்தளர்வடைந்து பின்னர் எப்பொழுதும் இன்றையதினம் போலத்
தெரிசிப்போமென்று நினைத்து அவ்வெண்ணத்தை மனசின்கண் இருத்தி எந்நாளும் உங்களுடைய தீனுல்
லிஸ்லாமென்னும் பயிரானது எவ்விடத்திலும் பிரகாசிக்கும்படி வாழ்கவென்று கூறி.
782.
பணிப ணிந்தெனக்
கெவைபணி விடையெனப் பகர
வணிய ணிந்தெனச்
செவியுறக் கேட்டதி சயித்து
மணிகி டந்தொளிர்
புயவரை விம்முற மகிழ்ந்தார்
திணிசு டர்க்கதிர்
வேல்வல னேந்திய திறலோர்.
15
(இ-ள்)
அந்தச் சர்ப்பமானது வணங்கி இனிமேல் எனக்குப் பணிவிடை யாதென்று கேட்க; அவ்வார்த்தையை
ஆபரணம் பூண்டதுபோலும் திண்ணிய பிரகாசம் பொருந்திய கிரணங்களைப் பெற்ற வேலாயுதத்தை
வலதுகையிற்றாங்கிய வீரமுடையவர்களான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் தங்களது
காதுகளிற் பொருந்தும்படி கேட்டு ஆச்சரியமுற்று இரத்தினாபரணங் கிடந்தொளிரா நிற்கும்
தோள்களாகிய இருமலைகளும் விம்மிதமுறும்படி மகிழ்ச்சி அடைந்தார்கள்.
783.
பொருப்பி டத்தினு
மடவிக ளிடத்தினும் புகுந்து
விருப்பு றும்படி
வாழ்வதல் லதுநெறி மேவி
யிருப்பி னின்வயி
னிடர்வரு மெனவெடுத் திசைத்தார்
கருப்பி ருந்துதே
னிடைதவழ் தொடையணி தோன்றல்.
16
|