ம
முதற்பாகம்
946.
மாட்டுவந் திருந்து
நின்பால் வந்தவை யெவைகொ லென்னப்
பூட்டிய கல்லுந் தானும்
புரண்டவன் றெருண்டு சொல்வான்
வீட்டினிற் புகுமின்
பாரம் வீழ்த்துமி னென்னு நுஞ்சொற்
கேட்டனன் கேட்ட
போதே கெட்டனன் கெட்டே னென்றான்.
46
(இ-ள்)
அவ்விதம் பார்த்த அவர்கள் அந்தச் சூதனின் பக்கத்தில் வந்து இருந்து கொண்டு உன்னிடத்தில்
வந்து சேர்ந்தவை யாவை யென்று கேட்கக்; கொழுவிய கல்லும் தானுமாகப் புரண்ட அந்தச் சூதனானவன்
தெருட்சியுற்று அவர்களை நோக்கிச் சொல்லுவான். வீட்டின்கண் போய் நுழையும். பாரமாகிய கல்லை
விழும்படி செய்யும் என்று சொல்லி உங்களுடைய வார்த்தைகளை நான் காதுகளினால் கேட்டேன். அப்படி
கேட்ட சமயமே நானும் கெட்டேன் கெட்டே னென்று சொன்னான்.
கலிநிலைத்துறை
947.
வருந்திக் கல்லிரு
கையினும் பிடிபட மயங்கி
யிருந்த வனிடத் தெய்திய
பேரதி சயித்துச்
சரிந்து வீழ்ந்திட
வீழ்த்தன ரீழ்த்தவர் தவித்தார்
விரிந்தி டாதுமேன்
மேலற விறுகிய விலங்கல்.
47
(இ-ள்)
அப்போது அந்தக் கல்லானது இரண்டு கைகளிலும் பிடிபடவே வருத்தமுற்று புத்தியானது மயக்கமடைந்து
இருக்கப் பெற்ற அந்தச் சூதனிடத்தில் போய்ச் சேர்ந்த காபிர்களாகிய மற்றச் சூதர்கள் ஆச்சரியமுற்று
அக்கல்லானது நழுவி விழுந்திடும்படி இழுத்தார்கள். அவ்விதம் இழுத்தும் இழுத்தவர்கள், தவிப்படைந்தார்களே
யொழிய அக்கல் அகலாது மேலும் மேலும் மிகவாய் இறுகியது.
948.
இல்லி னுட்புகுந்
தவரொரு முகம்படி விருந்து
பல்லி னாலித
ழதுக்கிமெய் யுரத்தொடும் பறிப்பச்
சொல்லொ ணாதுயிர்
பதைத்திட வுடறுடி துடிப்பக்
கல்லி னுட்புக வற்றன
வவன்மணிக் கரங்கள்.
48
(இ-ள்)
அவ்விதம் இறுகவே அந்த வீட்டினகம் போய் நுழைந்தவர்களான அந்தச் சூதச்சாதியார்க ளனைவர்களும்
ஒரு முகமாய்க்கூடி இருந்துக் கொண்டுத் தங்களது பற்களினால் அதரங்களைக் கடித்துச் சரீரபலத்தோடும்
அவனது கையை அந்தக் கல்லை விட்டும் வலாற்காரமாய் பிடுங்கச், சொல்ல முடியாது அவனது ஆவியானது
துடித்திடவும் சரீரம் மிகப்பதைத்திடவும் அவனின் மணிக்கைகள் அக்கல்லினுள் புகும்படி அற்றுப்
போயின.
|