பக்கம் எண் :

சீறாப்புராணம்

365


முதற்பாகம்
 

949. கரங்கள் போயின கல்லொடு மெனநிலை கலங்கி

    யிரங்கு வாரிடை வாரிது விதிகொலென் றேங்கி

    மரங்கி டந்தெனக் கிடந்தவர் மாட்டினின் றொருவ

    னரங்கு நின்றிழிந் தியல்புறுந் தரகனை யடைந்தான்.

49

     (இ-ள்) அவ்வாறு கைகளானவை அற்று அந்தக் கல்லோடும் போயினவென்று சொல்லி அங்குற்ற சூதர்க ளனைவர்களும் தங்களது நிலைமையை விட்டுங் கலக்கமடைந்து அழுவார்கள், வசக்கேடுறுவார்கள். மேலும் இது ஆதிகாலத்தி லுண்டான ஊழ்விதியினது பயனென்று சொல்லி யொலித்து மரங்கிடந்ததைப் போலக் கிடந்தவர்களாகிய அச் சூதர்களினிடத்தில் நின்று ஒரு மனிதன் அவர்களிருந்த அந்த அரங்கை விட்டு மொழிந்து இறங்கித் தகுதி பொருந்திய நபிகணாயக மவர்களோடு தங்கியிருக்கும் தரகனிடத்தில் வந்து சேர்ந்தான்.

 

950. தரக னுக்குரைத் தழைத்துயர் மேனிலை சார்ந்து

    விரகர் செய்தொழி லனைத்தையு மொன்றற விரித்தான்

    கரைக ணீருகக் கேட்டவன் மனங்கடு கடுத்து

    நரக வாதிக ளாயினீ ரெனநவின் றனனே.

50

     (இ-ள்) அவ்வாறு போய்ச் சேர்ந்த அவன் அந்தத் தரகனுக்கு கிளரமுற்ற அம்மேல் வீட்டின்கண் நடந்த செய்திகளைச் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு அங்கு சென்று விரகராகிய அச்சூதர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கொல்லும் பொருட்டுச் செய்த வேலைகளெல்லா வற்றையும் ஒன்றேனும் ஒழியாது விரித்துச் சொன்னான். அவைகளை தரகனானவன் காதுகளினாற் கேள்வியுற்று இரண்டு கண்களினது ஓரங்களிலும் கண்ணீர் சிந்திடும்படி மனமானது மிகவும் கோபித்து அவர்களைப் பார்த்து நீங்கள் யாவர்களும் நரக வாதிகளாக ஆய்ப்போனீர்களென்று சொன்னான்.

 

951. பாரி டைப்பெரி யவர்களுக் கிடர்படுத் திடவென்

    றோரு வன்மனத் தவர்களுக் குறுபொரு ளுலகிற்

    சாரு மக்களு மனைவியுந் தாமுந்தம் பொருளும்

    வேரொ டுங்கெடு மென்பது நிசமென விரித்தான்.

51

     (இ-ள்) அன்றியும், அத்தரகனானவன் இப்பூமியின்கண் மேன்மையை யுடையவர்களுக்குத் தீங்குண்டாக்கிட வேண்டுமென்று நினைக்கின்ற கொடிய இருதயத்தையுடையவர்களுக்குச் சார்ந்த சம்பத்தானது இவ்வுலகத்தினிடை பொருந்தும் புதல்வர்களும் மனையாளும் தாங்களும் தங்களது செல்வங்களும் அடியோடுங் கெட்டுப் போகுமென்று சொல்லுவது சத்தியமென்று விவரித்துச் சொன்னான்.