முதற்பாகம்
952.
ஓங்கு மாநில
மாக்களி லொருவருக் கொருவர்
தீங்கி யற்றிட நினைத்திடுங்
கொடியவத் தீமை
நீங்கி டாதவ
ருயிரினைப் பருகநே ரலர்கை
தாங்கும் வாளென
வொல்லையி லுறச்சமைந் திடுமே.
52
(இ-ள்)
அன்றியும், ஓங்குகின்ற பெருமை தங்கிய இப்பூலோகத்தின் கண்ணுள்ள மானிடர்களில் ஒருவருக்கு மற்றொருவர்
தீமை செய்திடும்படி மனசின்கண் எண்ணிடுங் கொடுமையையுடைய அந்தத் தீமையானது, அவர்களை விட்டு
மொழியாது அவர்களின் ஆவியைக் குடிக்கும்படி விரைவினில் சத்துராதிகள் தங்களது கையின்கண் தாங்கா
நின்ற வாளாயுதத்தைப் போலப் பொருந்தும்படி உண்டாகா நிற்கும்.
953.
ஈற மற்றபுன் மனச்சிறி
யவர்திரண் டகிலிக்
கோர மாகிய பழியையெண்
ணாக்கொடுங் கொலையாய்த்
தேரு நல்லறி
வாளருக் கிழைத்திடுந் தீங்கு
நீரி டைக்கன
னெருப்புகுத் திடுவதொத் திடுமே.
53
(இ-ள்)
அன்றியும், அன்பில்லாத கீழ்மையான இருதயத்தையுடைய சிறியவர்கள் ஒன்றுகூடிப் பகைத்து இவ்வுலகத்தின்
கண்ணுண்டாகுகின்ற கொடுமையாகிய நிந்தனையையும் மனத்தினுள் எண்ணாது கொடிய கொலைத் தொழிலாய்த்
தேர்ச்சியுறா நின்ற நல்ல அறிவினை யுடையவர்களுக்குச் செய்யுந் தீமையானது, வெப்பத்தையுடைய
நெருப்பை ஜலத்தின்கண் சொரிந்திடுவதை நிகராநிற்கும்.
954.
மக்க மாநகர் முகம்மது
தமக்கல மறுவிற்
றக்க பேர்க்கிடர்
நினைப்பதுந் தகுவதன் றேயான்
மிக்க வார்த்தையில்
விளம்புவ தென்கொல்நும் வினையால்
கைக்கு மேற்பலன்
பலித்தது காண்டினி ரென்றான்.
54
(இ-ள்)
அன்றியும், இந்தத் திருமக்கமா நகரத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கல்ல.
மற்ற குற்றமற்ற தகுதியையுடையவர்களுக்குத் தீங்குக ளெண்ணுவதும் தகுவதல்ல ஆதலால் நான் அவைகளைப்
பற்றி அதிகமான வார்த்தைகளினால் எடுத்துப் பேசுவதில் என்ன பிரயோசனம்? உங்களுடைய செய்கையினால்
உங்களுக்கு இப்போது கையின்மேல் இலாபமானது வாய்த்தது? அதைப் பாருங்களென்று சொன்னான்.
955.
ஆதி தூதுவ ரொருவர்வந்
தடைகுவ ரெனவே
வேத வல்லவ
ருறுமொழி நமக்குமுன் விரித்தா
ரேத மற்றவ ரவரிவ
ரலதுவே றிலையாற்
போதி ணைச்சரண்
பணிந்திவை புகலுவ மென்றான்.
55
|