முதற்பாகம்
(இ-ள்)
அன்றியும், இப்பூமியின்கண் யாவற்றிற்கும் முதன்மையனான ஜல்ல ஜலாலஹூவத்த ஆலாவின் றசூல்
ஒருவர் உதயமாகி வந்து சேர்வாரென்று வேதங்களைக் கற்றுத் தேர்ந்த வல்லவர்களான பண்டிதர்கள்
நமக்கு முன்னமே பொருந்திய வார்த்தைகளினால் விவரித்துச் சொல்லி யிருக்கிறார்கள். குற்றமற்றவரான
அந்நபி இந்த முகம்மதே யல்லாமல் வேறேயொருவரு மில்லாததினால் நாம் அனைவர்களும் அவர்களினிடத்திற்போய்
அவர்களின் தாமரைமலர் போன்ற இருபாதங்களையும் வணங்கி இந்தச் சமாச்சாரங்களெல்லா வற்றையும்
சொல்லுவோமென்று சொன்னான்.
956. பொருத்து நன்மொழி
யிதுகொலென் றேமிகப் புகழ்ந்து
கருத்த ழிந்தவக்
கருத்தினி னன்கெனக் கருதித்
தரித்த பேரனை
வருமெழுந் தனரதிற் றரக
னொருத்தன் முன்னெழுந்
தணிமுகம் மதினிடத் துற்றான்.
56
(இ-ள்) அத்தரகனானவன்
அவ்வாறு சொல்ல அந்தச் சூதர்களனைவர்களும் இருதயத்தின்கண் பொருத்தா நிற்கும் நல்ல வார்த்தையானது
இதுதானென்று சொல்லி அத்தரகனை மிகவாய்த் துதித்துக் கருத்தானது அழியப் பெற்ற அக்கருத்தின்கண்
நல்லதென்று நினைத்து அந்த மேன்மாடத்தின்கண் தரித்திருந்த அவர்களெல்லாவரும் தாங்களிருந்த
இடத்தை விட்டும் எழும்பினார்கள். அப்போது அவ்விதம் எழும்பியதில் தரகனாகிய அவ்வொருவன்
அவர்களுக்கு முன்னரெழும்பி அழகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இருக்கப்பட்ட
இடத்தில் வந்து சேர்ந்தான்.
957.
ஏத முற்றவன் மனக்கொடி
யவர்களில் லிடத்தோர்
பாத கத்தினை விளைத்தனர்
பலித்ததங் கவர்பால்
வேத னைப்படர்
விள்ளுதற் கரிதுவெள் வேலோ
யீது வந்தவை யெனப்பணிந்
துரைத்தவ ணிருந்தான்.
57
(இ-ள்)
அவ்வாறு வந்து சேர்ந்த அந்தத் தரகனானவன் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப்
பார்த்து வெள்ளிய வேலாயுதத்தைத் தாங்கிய கையினையுடைய நபிகள் பெருமானே! குற்றத்தைப்
பொருந்திய கொடிய மனத்தையுடைய துஷ்டர்களாகிய இந்தச் சூதர்கள் இவ்வீட்டின்கண் ஒரு துரோகச்
செயலைச் செய்தார்கள். அத்துரோகம் அங்கு அவர்களிடத்திலேயே வாய்த்தது. அதனால் அவர்களுக்குண்டாயிருக்கும்
துன்பத்தையுடைய வருத்தமானது வாயினால் எடுத்துச் சொல்லுவதற் கரிதாகும் இதுதான் இங்கு வந்து சேர்ந்தவை
யென்று அவர்களை வணங்கிச் சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்தான்.
|