முதற்பாகம்
961.
சொன்ன போதினி
லோடினர் சோரிநீர் சொரியத்
தன்னி ருங்கர மிழந்தவன்
றனைச்சடு தியினின்
மன்னர் மன்னவர்
முன்கொணர்ந் தனர்மணிக் கரத்தைப்
பின்ன மாக்கிய
சிலையையுஞ் சிறுமையிற் பெரியோர்.
61
(இ-ள்)
அவ்விதம் சொல்லிய சமயத்தில் அங்கு நின்ற சிறுமைத் தொழிலிற் பெரியவர்களான சூதர்கள்
ஓடிப் போய் இரத்தநீரானது சிந்தும்படித் தனது பெரிய இருகைகளையும் இழந்தவனாகிய அந்தச்
சூதனையும் அவனது மணிக்கரங்களைச் சிதைவுபடுத்திய அந்தக் கல்லையும் விரைவில் அரசர்கட்கெல்லாம்
அரசரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முன்னர் கொண்டு வந்தார்கள்.
962.
கல்லி னுட்புதைந்
துறைந்திடுங் கரங்களுங் கரம்போ
யல்ல லுற்றிடைந்
தழுங்கிடு மவனையு நோக்கிச்
செல்ல லம்பிய
கரதல முகம்மது தெளியாப்
புல்லர் வஞ்சக நெஞ்சகந்
தெரிதரப் புகல்வார்.
62
(இ-ள்)
அப்போது மேகங்களானவை அலம்பா நிற்கும் கைத்தலத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் கல்லினகம் புதையப் பெற்றுத் தங்கியிருக்கும் கைகளையும் அக்கைகள் அறுந்துப்
போய் துன்பத்தையடைந்து வசக்கேடாகி அழுதிடும் அந்தச் சூதனையும் பார்த்துத் தேறாத சிந்தையைக்
கொண்ட கீழ்மையையுடையவர்களான அங்குற்ற சூதர்களின் கபடமமைந்த நெஞ்சின் அகமானது தெரிந்து
கொள்ளும் வண்ணம் சொல்லுவார்கள்.
963.
கரிய கல்லினிற்
பதிந்திடுங் கரத்தினின் கரத்தைத்
தெரிய வைத்திடென்
றோதிய மொழியினைத் தேறிச்
சொரித ருங்குரு திகளொடுந்
துடுப்பெனுங் கரங்க
ளரிதி னீட்டியே தொட்டிட
வொட்டின வன்றே.
63
(இ-ள்)
கரும் நிறத்தையுடைய அந்தக் கல்லின்கண் அழுந்திடும் கையில் உனது கையைத் தெரியும்படி வையென்று
கூறிய வார்த்தைகளை அந்தச் சூதனானவன் மனசின்கண் தெளிந்து பொழியாநின்ற இருகைகளிலு முள்ள
இரத்தங்களுடன் துடுப்பென்று சொல்லா நிற்கும் கைகளை அரிதில் நீட்டித்தொட, அக்கைகள் ஒன்றோடொன்று
பொருந்திக் கொண்டது.
964.
உறையுங் கல்லினிற்
கரங்களை நெகிழென வுரைப்பக்
குறைவி லாதுற
வாங்கின னீரினிற் குளித்து
மறையு மென்கரம்
வாங்கின தெனமறுத் தழும்பு
கறையு மில்லென விலங்கின
தவனிரு கரங்கள்.
64
|