பக்கம் எண் :

சீறாப்புராணம்

370


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் பொருந்தவே நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கல்லின்கண் தங்காநிற்கும் அந்தக் கைகளை நெகிழென்று சொல்ல, அதைக் கேட்ட அந்தச் சூதனானவன் ஜலத்தின்கண் மூழ்கி அதில் மறையா நிற்கும் மெல்லிய கைகளை இழுத்தார் போல யாதொரு குறைவுமில்லாது தனது கைகளைப் பொருந்தும்படி இழுத்தான். அப்போது அவனது இருகைகளும் குற்றத்தையுடைய காயமும் இரத்தமும் இல்லையென்று சொல்லும் வண்ணம் பிரகாசித்தன.

 

965. முன்னை நாளினும் பெலனுறு முழுமலர்க் கரத்தால்

    வன்ன மாமலர் முகம்மதி னிணையடி வருடி

    யின்ன னீக்கினை யிருகரம் பொருத்தினை யினியென்

    றன்னை யாளுதி கடனென வடிக்கடி தாழ்ந்தான்.

65

     (இ-ள்) அப்போது அந்தச்சூதன் முந்திய நாள்களிலும் அதிகமாய் வலிமை பொருந்தா நிற்கும் முழுமையான தாமரைப் புஷ்பம் போன்ற அந்தக் கைகளினால் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சித்தரிப்பையுடைய பெருமை தங்கிய கமலமலர்போலும் இரு பாதங்களையுந் தடவி எனக்குண்டாயிருந்த துன்பங்களை யொழித்தீர்கள். அன்றியும் எனது இரண்டு கைகளையும் பொருந்தும்படி செய்தீர்கள். ஆதலால் இனிமேல் என்னை ஆண்டு கொள்ளுங்கள்? அப்படி ஆண்டு கொள்வது தங்கள் மீது கடனென்று சொல்லி அடிக்கடி வணங்கினான்.

 

966. கொடிய சூதர்கள் வன்னசு றானியின் குலத்தோர்

    நெடிய காரண மெனமுகம் மதுதமை நெகிழா

    தடியி னிற்பணிந் தாசரித் தாசனத் திருத்திக்

    கடிதி னும்பொரு ளிவையெனக் கணக்குடன் கொடுத்தார்.

66

     (இ-ள்) அன்றியும், அங்கு சூழ்ந்திருந்த கொடுமையையுடைய சூதர்களும் வன்மை தங்கிய நசுறானிகளின் குலத்தி லுள்ளவர்களும் இஃது நீண்ட காரணமென்று சொல்லி நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைப் பணிந்து கொண்டாடி ஒரு ஆசனத்தின் மீது இருக்கும்படி செய்து இவைகள் உங்களது பொருள்களென்று விரைவில் கணக்கோடும் எடுத்துக் கொடுத்தார்கள்.