முதற்பாகம்
ஊசாவைக்கண்ட படலம்
கலிநிலைத்துறை
967.
மிக்க செம்பொனீந்
தவர்க்குநன் மொழிபல விளம்பிப்
புக்கி ருந்தவ
ருடனெழுந் தகன்றுபொன் றிகழத்
தக்க மாமணிக்
கதிர்விடு மறுகினிற் சார்ந்தோ
ரக்க சாலையி னிடத்துவந்
திருந்தன ரன்றே.
1
(இ-ள்) நமது நாயகம் ஹபீபுறப்பில்
ஆலமீன் முகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மிகுந்த செந்நிறத்தையுடைய திரவியங்களை
எடுத்துக் கொடுத்த அந்தக் காபிர்களாகிய சூதர்களுக்கு நன்மை பொருந்திய பலவித வார்த்தைகளைச்
சொல்லித் தங்களோடு அங்கு வந்து புகுந்திருந்த தரகன் முதலிய மற்றவர்களுடன் எழும்பி அவ்விடத்தை
விட்டும் நீங்கிப் பொன்னானது பிரகாசிக்கும்படி தகுதியுற்ற பெருமை பொருந்திய இரத்தின வரக்கங்களினது
கிரணங்களை வீசாநிற்கும் மேன்மாடங்கள் யுடைய அந்தத் தெருவீதியின்கண் அடைந்தோர்களான அவர்கள்
யாவர்களும் ஒரு கொல்லனுலைக் கூடத்தில் வந்து தங்கி இருந்தார்கள்.
968.
நெருப்பு குத்திடுந்
தெறித்திடுஞ் சுடுஞ்சுடு நெறியீ
ரிருப்பி டந்தவிர்ந்
தெழுமெனத் தபதிய னிசைப்ப
வொருப்ப டத்துணக்
கெனப்புறத் தொதுங்கின ருழையோர்
விருப்ப
முற்றிருந் தெதிரகு மதுவிளக் கினரால்.
2
(இ-ள்) அவ்வித மிருக்கவே அங்குள்ள
கொல்லன் அவர்களைப் பார்த்து வழிப்போக்கர்களே! நான் காய்ச்சி யடிக்கும் இந்த இரும்புப்
பாளத்திலிருந்து அக்கினிப் பொறிகள் சிதறும். அவை உங்கள் மேலே தெறிக்கும் சுடும்! சுடும்!
ஆதலால் நீங்களிருக்கப்பட்ட உங்களது இருப்பிடத்தை விட்டுமொழிந்து எழும்புங்களென்று சொல்ல,
அதைக் கேட்ட அவ்விடத்திலிருந்த யாவர்களும் ஒருமனப்படப் பயந்து எழும்பிப் பக்கத்திற்
போய் ஒதுங்கினார்கள். அப்போது அஹ்மதென்னும் திருநாமத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் பிரியமுற்று அவனது எதிராக இருந்து அவன் சிந்தையை விளங்கும் வண்ணம் செய்தார்கள்.
|