முதற்பாகம்
978.
கருதார்வரு திறலாலிடு
கலகந்தர மன்றென்
றிரைவாகிய சினத்தானய
குணத்தாற்றிர ளினத்தாற்
பொருவோமெனு மனத்தாலதி
புகழார்முகம் மதுவை
மருவார்மன மலையக்கொடு
மதிளின்புறம் வந்தார்.
12
(இ-ள்) அப்போது திருமக்கமாநகரத்தை யுடையவர்களான
வியாபாரிகள் சத்துராதிகள் வரா நின்ற வலிமையினாலே நாமிடுகிற சண்டையானது முறைமையில்லை யென்று
சொல்லிச் சீறுதலாகிய கோபத்தினாலும் நயப்பையுடைய குணத்தினாலும் திரட்சியுற்ற கூட்டத்தினாலும்
நாம் அவர்களுக்கு ஒப்பாக மாட்டோமென்னும் மனத்தினால் மிகுத்த கீர்த்தியையுடைய நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை அந்தச் சத்துராதிகள் தங்களது இருதயமானது மலையும் வண்ணம் கூட்டிக்
கொண்டு அந்த ஷாம் நகரத்தின் கோட்டை மதிலினது பக்கத்தில் வந்தார்கள்.
979.
நறைதுன்றிய
சுதைவெண்கதி ரெயிலின்புற நண்ணி
யுறையும்விடு தியில்வந்தன
ரொளிமாமுகம் மதுவுந்
துறையின்றொழில்
வகையுந்தொகை நிதியுமுறை முறையாய்
நிறைகின்றன குறையின்றென
நெறியேகிட நினைவார்.
13
(இ-ள்) அவ்விதம் வந்த அவர்களியாவர்களும்
வாசனையானது நெருங்கப் பெற்ற வெண்ணிறத்தைக் கொண்ட சுண்ணச் சாந்தினையுடைய பிரகாசமமைந்த
அந்தக் கோட்டை மதிலின் பக்கத்தை நெருங்கி அவரவர்கள் தங்கியிருக்கும் விடுதியின்கண்
போய்ச் சேர்ந்தார்கள். அப்போது பெருமை பொருந்திய ஒளிவையுடைய நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களும் துறையினையுடைய நமது வியாபாரத் தொழிலின் முறைமையும் தொகையாகிய
பொருளும் வரிசைவரிசையாய் அதிகரிக்கின்றன. யாதொரு குறையுமில்லை யென்று சொல்லித் தங்களின்
ஊரினது பாதையை நாடிப் போகும்படி மனசின்கண் எண்ணினார்கள்.
980.
எருதொட்டக மடல்வெம்பரி
யிருபக்கமு நிறைய
மரவத்தொடை
புயமுங்கிட வருமக்கிக டாமுந்
தருமத்துரை நயினாரொடு
சதுரன்மைச றாவும்
புரிசைப்புற நகர்விட்டணி
பொழில்புக்கி நடந்தார்.
14
(இ-ள்) அவ்வாறு எண்ணிய புண்ணிய வதிகாரியாகிய
நயினார் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுடன் கதீஜா நாயகமவர்களா லனுப்பப்பட்ட மைசறா
வென்பவனும் குங்குமப் புஷ்பத்தினாலாகிய மலர்மாலையானது இரண்டு தோள்களும் முங்கும்படி வராநிற்கும்
மக்கமா நகரத்தை
|