பக்கம் எண் :

சீறாப்புராணம்

378


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு மகிழ்ச்சியடைந்த அவ்வூசாவென்னும் பண்டிதன் அழகு பொருந்திய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பக்கத்தில் நீங்காது தங்கியிரா நின்ற மைசறாவென்பவனைப் பார்த்துத் துஷ்டர்களாகிய பகைவர்களை யுதையாநிற்கும் வலிமைதங்கிய பாதங்களை யுடையவரே! உம்முடைய குலம் யாதென்று கேட்க, நான் விடத்தைப் போலும் கூர்மைதங்கிய கண்களையும் கொடியைப் போலும் பொருந்திய இடையினையுமுடைய கதீஜாவென்னும் மயில் போன்ற சாயலை யுடையவர்களின் அடிமையர்களில் எளியவனும் அவர்களுக்கு மிகவும் சொந்தமானவனுமென்று சொன்னான்.

 

987. மடமாமயில் கதிசாவென வளர்கோதையை யுதவு

    மடலாரரி குவைலிதெனு மறிவோன்மறை மொழியைக்

    கடவாதநன் மதியோனுயர் கனபேரரு ளானென்

    னுடலாருயி ரெனவேமுத லுறவானவ னென்றான்.

21

     (இ-ள்) மைசறாவென்பவன் அவ்வாறு பெருமை பொருந்திய இளம்பருவத்தைக் கொண்ட மயில் போலும் சாயலையுடைய கதீஜாவென்று சொல்லிய மாத்திரத்தில், அவ்வூசாவென்னும் பண்டிதன் ஓங்கா நிற்கும் புஷ்பமாலையணிந்த கூந்தலையுடைய அந்தக் கதீஜாவை இவ் வுலகத்தின்கண் தந்த பகைவர்களென்னும் யானைகளுக்குச் சிங்கமாகிய குவைலிதென்னும் அபிதானத்தைப் பெற்ற அறிவினையுடையவன். வேதவாசகத்தை விட்டும் மீறாத நல்ல புத்தியை யுடையவன். மேலாகிய மிகுத்த பெரிய கிருபையையுடையவன். எனது சரீரத்தின்கண் பொருந்திய ஜீவனைப் போல எனக்கு ஆதிகாலத்திலே சினேகமானவனென்று சொன்னான்.

 

988. முன்னாளுற வெனவோதிய முதியோன்முக நோக்கி

    யென்னாருயி ரனையீரும திடுபேர்சொலு மெனவே

    மன்னாகிய மைசறாசொல் மறையோனு மகிழ்ந்தே

    யொன்னாரரி யேயென்பெய ரூசாவென வுரைத்தான்.

22

     (இ-ள்) அவ்வாறு ஆதிகாலத்திலேயே சினேகமென்று சொல்லிய முதியவனான அவ்வூசாவென்பவனின் முகத்தை ஏவற்றொழிலில் அரசனான மைசறாவென்பவன் பார்த்து எனது சரீரத்தின்கண் பொருந்தா நிற்கும் ஆவியை நிகர்த்தவரே! உமக்கு இட்டபெயர் யாது? அதை என்னோடு சொல்லுமென்று கேட்க; மறையோனாகிய அவ்வூசாவென்பவனும் மனமகிழ்ச்சியடைந்து சத்துராதிகளாகிய யானைகளுக்குச் சிங்கமானவரே! எனது பெயர் ஊசாவென்று சொன்னான்.