முதற்பாகம்
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய
விருத்தம்
989.
உரையினி லுறவு குவைலிதென்
றூசா
வுரைத்தவை
யுளத்தினிற் குறித்துக்
கரைவழிந் தொழுகு
மகிழ்ச்சியாய் மைசறா
கருங்குழற் செவ்விதழ்க் கனிவாய்த்
திருமொழி யுரைத்த
திவனெனக் கருதிச்
செவ்வியோன்
முகமதை நோக்கிப்
புரையற நுமக்குச்
சொல்வதொன் றுளது
கேண்மினென்
றன்பொடு புகல்வான்.
23
(இ-ள்) அப்போது மைசறாவென்பவன் வார்த்தைகளினால்
எனக்கு குவைலிதென்பவன் சினேகமென்று சொல்லிய சமாச்சாரங்களனைத்தையும் மனசின்கண் மதிப்பிட்டுக்
கரைகளில் வழிந்து ஒழுகா நிற்கும் களிப்பினைக் கொண்டு கரிய கூந்தலையும் சிவந்த அதரங்களையும்
கொவ்வைக் கனிபோன்ற வாயினையுடைய கதீஜா நாயகமவர்கள் தங்களது தெய்வீகமுற்ற வார்த்தைகளாகச்
சொன்னது இவ்வூசாதானென்று எண்ணி அழகையுடையவனான அந்த வூசா வென்பவனின் முகமாகிய தாமரைமலரைப்
பார்த்துக் குற்றமற உமக்குச் சொல்ல வேண்டிய சமாச்சார மொன்றுள்ளது. அதை உமது காதுகளினால் கேளுமென்று
அன்புடன் சொல்வான்.
990.
குறைசியங் குலத்துக்
கொருமணி யெனவுங்
குவைலிதுக
கிருவிழி யெனவு
மறைதிரைக் கடலி
லமுதெனப் பிறந்த
வரிவையர்க்
கணியெனுங் கதீசா
நிறைமதி மடியிற்
றவழவந் துகிலிற்
பொதியவு நெறிபடுங்
கனவி
னுறைபடும் பொருளை
யுணர்கெனச் சலாமு
மோதின
ருமக்கென வுரைத்தான்.
24
(இ-ள்) அழகிய குறைஷிக்குலத்திற்கு ஒப்பற்ற
இரத்தினத்தைப் போலவும், குவைலி தென்பவருக்கு இருகண்களைப் போலவும், ஒலியா நிற்கும்
அலைகளையுடைய சமுத்திரத்தின்கண் ணுண்டான அமுதத்தை நிகர்த்து இவ்வுலகத்தில் தோற்றமாகிய பெண்களுக்கு
நுதலினணியைப் போலவுமாகிய கதீஜாநாயகமவர்கள் நித்திரையில் பூரணச் சந்திரனானது ஆகாயத்திலிருந்து
மிறங்கித் தங்களின் மடியின் மேலிருந்து தவழவும், அதைத் தங்களின் வஸ்திரத்தினாற் பொதியவுமான
செவ்வையை யுடைய ஒரு சொப்பனத்தில் தங்கா நின்ற பொருளை என்னை உங்களிடத்தில் கேட்டறிவாயாக
வென்று சொல்லி உங்களுக்கு சலாமுஞ் சொன்னார்களென்று சொன்னான்.
|